Published : 16 Dec 2024 04:09 AM
Last Updated : 16 Dec 2024 04:09 AM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிவைத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பிறகு நடைபெற்ற கூட்டங்களில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்புக்கு (ஓசிசிஆர்பி) நிதியுதவி அளிக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன் நேரு குடும்பத்துக்கு நீண்டகால உறவு இருப்பதாக காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி நீடித்தது.
இதற்கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எம்.பி.க்களுக்கு மசோதா நகல்: மக்களவையில் ஒரேநாடு, ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் டிசம்பர் 16-ம் தேதி (இன்று) தாக்கல் செய்வார் என முதலில் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற நடைமுறைப்படி, எம்.பி.க்களுக்கு இந்த மசோதாக்களின் நகல் கடந்த வாரம் வழங்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்ற அலுவல் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
அதில், ‘துணை மானிய கோரிக்கைகள் குறித்து மக்களவையில் 16-ம் தேதி (இன்று) விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மானியகோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, இந்த வாரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மசோதா தாக்கல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT