Published : 16 Dec 2024 03:13 AM
Last Updated : 16 Dec 2024 03:13 AM

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க மாயாவதி வலியுறுத்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இண்டியா கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற மக்களவையில் அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, தலித் மற்றும் ஓபிசி பிரிவினரின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் இடஒதுக்கீடு குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவித்தனர். அதில் துளி அளவுகூட உண்மை இல்லை. இந்த விவகாரத்தில் அந்த இரு கட்சிகளும் அமைதியாக இருந்திருக்கலாம்.

ஏனென்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசு பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போது இந்த மசோதாவை காங்கிரஸ் துணையுடன் சமாஜ்வாதி கடுமையாக எதிர்த்தது. அந்த மசோதா நகலை சமாஜ்வாதி கட்சியினர் கிழித்தெறிந்தனர். இந்த மசோதா இன்னமும் நிலுவையில் உள்ளது. எனவே, இடஒதுக்கீடு குறித்து பேச இவ்விரு கட்சிகளுக்கும் தகுதி இல்லை.

பாஜகவும் இடஒதுக்கீடுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் நிலுவையில் உள்ள அந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்வரவில்லை.

ஏழைகள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவான கட்சி என்ற அடிப்படையில், பாஜக அரசு கொண்டுவர உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசின் செலவுகள் குறையும். இதனால் மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும். எனவே, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x