Published : 15 Dec 2024 06:55 PM
Last Updated : 15 Dec 2024 06:55 PM

துணை மானியக் கோரிக்கைக்கு பின்பே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மத்திய அரசு ஒத்திப்போட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என முதலில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாடாளுமன்ற அலுவல் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

அதில் துணை மானியக் கோரிக்கைகள் குறித்து நாளை விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறைவேறிய பின்பே, இந்த வாரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான மசோதா வரையறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மக்களவையில் நாளை (டிச.16) இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மத்திய அரசு ஒத்திப்போட்டுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x