Published : 15 Dec 2024 05:45 PM
Last Updated : 15 Dec 2024 05:45 PM

இண்டியா கூட்டணி தலைமை பொறுப்பில் காங். தீவிரமாக செயல்பட வேண்டும்: உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: இண்டியா கூட்டணியின் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற பின்பு உமர் அப்துல்லா முதல் முறையாக பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவரிடம் இண்டியா கூட்டணியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தேசியளவில் செல்வாக்கு உள்ளது. நாடாளுமன்றத்திலும் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் தலைமை பதவியில் காங்கிரஸ் உள்ளது. ஆனால், அதன் செயல்பாடு குறித்து கூட்டணி கட்சிகள் கவலைப்படுகின்றன. இண்டியா கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு தலைமை பதவியில் இருக்க வேண்டும். தானாக கிடைத்தது என்பதற்காக அந்த பொறுப்பில் இருக்கக் கூடாது.

நாடாளுமன்றத்தில் தனிபெரும் கட்சியாக இருப்பதால், மக்களவையிலும, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் காங்கிரஸ் உள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் தேசிய கட்சி. இதுபோல் இண்டியா கூட்டணியில் உள்ள எந்த கட்சியையும் கூற முடியாது. அதானல்தான், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான தலைமை அந்த கட்சிக்கு தானாக கிடைத்தது.

எதிர்க்கட்சிகளின் தலைமை பதவியில் இருக்க காங்கிரஸ் கட்சி போதிய அளவில் உழைக்கவில்லை என கூட்டணி கட்சிகள் சில உணர்கின்றன. இதை சரிசெய்வது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்க வேண்டும்.

இண்டியா கூட்டணியின் கூட்டம் அடிக்கடி நடைபெறுவதில்லை. தேவை ஏற்பட்டால் எப்போதாவது கூடும் இந்த கூட்டணியின் தற்போதைய அணுகுமுறை பயனற்றதாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பு 6 மாதங்கள் தீவிரமாக செயல்படுவதோடு எதிர்க்கட்சிகளின் கூட்டணி நின்றுவிடக்கூடாது. அதையும் தாண்டி இண்டியா கூட்டணியின் செயல்பாடு இருக்க வேண்டும். இண்டியா கூட்டணி வலுவாக செயல்பட சீரான இடைவெளியில் கலந்துரையாடல் அவசியம். வழக்கமான தொடர் சந்திப்புகள் கூட்டணிக்குள் நடைபெற வேண்டும்.

சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடு குறித்து ஆலோசித்து தொகுதி பங்கீடு உத்திகளை மேம்படுத்த வேண்டும். தொகுதி பங்கீடு பிரச்சினையால் பல மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. ஜம்மு காஷ்மீர் அரசில் அமைச்சரவை இடங்கள் குறைவாக உள்ளன. எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் அமைச்சர் பதவிக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இக்கும்வரை இந்த விவகாரத்தில் விலகியிருப்போம் என காங்கிரஸ் கூறியுள்ளது. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்போது, அவர்களின் நிலைப்பாடு மாறும். அதனால், நாடாளுமன்றத்தில் இதர விஷயங்களுக்காக போராடும் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் பேசும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x