Published : 15 Dec 2024 04:12 PM
Last Updated : 15 Dec 2024 04:12 PM

நாடு முழுவதும் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைப்பு

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடந்த லோக் அதாலத் - ல் தீர்க்கப்பட்ட தொகை ஒப்படைப்பு | படம்: மூர்த்தி

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களை நோக்கி வரும் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சார்பில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான 4-வது மற்றும் கடைசி மக்கள் நீதிமன்றம், ராஜஸ்தான் தவிர அனைத்து மாநிலங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் 1.45 கோடி வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும் இதன்மூலம் சுமார் ரூ.7,462 கோடி பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும் என்ஏஎல்எஸ்ஏ சிறப்புப் பணி அதிகாரி ஷ்ரேயா அரோரா மேத்தா தெரிவித்தார். இதன்மூலம் 1.22 கோடி புதிய வழக்குகள் நீதிமன்றத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 23.7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், நீதிமன்றங்களில் இன்னும் 4.65 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

என்ஏஎல்எஸ்ஏ தலைவரும் தலைமை நீதிபதியுமான சஞ்சீவ் கன்னா மற்றும் என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவர் நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்நடைபெற்ற முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் இதுவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நீதிமன்றங்களின் வெற்றி அதிகரித்து வருவது பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என என்ஏஎல்எஸ்ஏ உறுப்பினர் செயலர் பரத் பராசர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிந்ததும், வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x