Published : 15 Dec 2024 03:38 PM
Last Updated : 15 Dec 2024 03:38 PM

டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; அதிஷி, கேஜ்ரிவால் அதே தொகுதியில் போட்டி

புதுடெல்லி: அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், இன்னாள் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலின் படி, சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிடுகிறார். கஸ்தூரிபா நகர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ மதன் லாலுக்கு பதிலாக அந்த தொகுதியில் ரமேஷ் பெஹல்வான் அறிவிக்கப்பட்டுள்ளார். பெஹல்வானும் அவரது மனைவியும் கவுனிசிலருமான குசும் லதா பாஜகவில் இருந்து விலகி இன்று காலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

வரவிருக்கும் டெல்லி பேரவைத் தேர்தலில் தற்போதைய எம்எல்ஏக்கள் 20 பேருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் மூன்று பேர் தங்களுக்கு பதில் தங்களின் குடும்ப உறுப்பினர்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அதன் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த மாதம் 21-ம் தேதி வெளியிட்டது. இதில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதில் ஆறு பேர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி (இரண்டு கட்சியிலும் தலா 3 பேர்) ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

2-வது வேட்பாளர் பட்டியலை டிசம்பர் 9ம் தேதி வெளியிட்டது. இதில் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் 15 தொகுதிகளில் அதன் தற்போதைய எம்எல்ஏக்களுக்கு பதிலாக கட்சியின் அமைப்புக்குள் தீவிரமாக செயல்பட்டுவரும் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கேஜ்ரிவால் ட்வீட்: ஆம் ஆத்மி கட்சி இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கேஜ்ரிவால், "ஆம் ஆத்மி கட்சி டெல்லி பேரவைக்கான 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. கட்சி முழுமையான நம்பிக்கை மற்றும் தயாரிப்புகளுடன் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாஜகவை எங்கும் காணவில்லை.

அவர்களிடம் முதல்வர் வேட்பாளர் இல்லை, குழு இல்லை, டெல்லிக்கான திட்டமும், தொலைநோக்கு பார்வையும் இல்லை. அவர்களிடம் இருக்கும் ஒரே முழக்கம், கொள்கை, நோக்கம் எல்லாம் கேஜ்ரிவாலை அகற்று என்பதே. டெல்லி மக்கள் அடுத்தவர்களை வசை பாடுபவர்களுக்கு அல்ல,வேலை செய்பவர்களுக்கே வாக்களிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

வாழ்வா சாவா போராட்டம்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜ்ரிவால் தனது தொகுதியான புதுடெல்லியிலேயே போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி, அதன் முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித்-ன் மகனான சந்தீப் தீட்சித்தை நிறுத்துகிறது.

மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்து இந்தத் தொகுதியில் 2013 மற்றும் 2015-ல் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தோல்வி கண்டார். இந்த நிலையில் சந்தீப்புக்கு, இந்தத் தேர்தல் அரசியல் போட்டி என்பதை விட கூடுதல் பொறுப்பு மிக்கது. தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், பழைய தோல்விகளை சமன் செய்யவும் ஒரு வாய்ப்பு.

கேஜ்ரிவாலுக்கும் தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி மக்களின் மனங்களை வென்றடுக்க வேண்டும் என்ற நெருக்கடியும் உள்ளது.கேஜ்ரிவாலுக்கு எதிராக சந்தீப்பை நிறுத்தும் காங்கிரஸின் செயல் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x