Last Updated : 15 Dec, 2024 12:14 PM

2  

Published : 15 Dec 2024 12:14 PM
Last Updated : 15 Dec 2024 12:14 PM

டிஎம்சியின் பாபர் மசூதி vs பாஜகவின் ராமர் கோயில் - மே.வங்கத்துக்கு மாறுகிறதா அயோத்தி அரசியல்?

கோப்புப் படம்

புதுடெல்லி: முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டவிருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக பெர்ஹாம்பூரில் ராமர் கோயில் கட்டுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதனால், உ.பி.யில் முடிவுக்கு வந்த அயோத்தி அரசியல், மேற்குவங்க மாநிலத்துக்கு மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்எல்ஏ, கடந்த வாரம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் அவர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முர்ஷிதாபாத் மாவட்ட பெல்தங்காவில், பாபர் மசூதி கட்டப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். நூறு பேருடன் அறக்கட்டளை அமைத்து 2 ஏக்கரில் அதன் பணிகள் டிசம்பர் 6, 2025 இல் துவங்குவதாகவும் தெரிவித்திருந்தார். முர்ஷிதாபாத்தின் பரத்பூர் தொகுதி எம்எல்ஏவான ஹுமாயூன், மசூதிக்காக ரூ.1 கோடி தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திரிணமூல் காங்கிரஸ், “பாபர் மசூதி கட்டுவதாக அறிவித்தது கபீரின் சொந்த முயற்சி. அதில் கட்சிக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை” என அறிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக, ‘மேற்குவங்கத்தில் ராமர் கோயில் கட்டப்படும்’ என எதிர்க்கட்சியான பாஜக அறிவித்திருந்தது.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அக்னிமித்ரா பால் வெளியிட்ட அறிவிப்பில், “மசூதிக்கு இணையாக எனக் கருதாமல் பாபர் மசூதியை போல் ராமர் கோயிலும் கட்டப்படுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாபர் மசூதி கட்டப்படுவதாகக் கூறிய அதே நபர், ஒருமுறை இந்துக்களை வெட்டி பாகீரதி நதியில் வீசுவதாக எச்சரித்திருந்தார். இதற்காக கபீர் மீது விளக்கம் கேட்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் பின்னணியில், மம்தா பானர்ஜி இருக்கிறார். இவர் தம் வாக்கு வங்கிக்காக மற்றொரு வங்கதேசத்தை உருவாக்குகிறார். அயோத்தி ராமர் கோயிலின்முதல் வருட நிறைவு நாளான ஜனவரி 22-ல் நாம் பெர்ஹாம்பூரில் ராமர் கோயிலை கட்டும் பணியை துவக்குவோம். அயோத்யாவின் ராமர் கோயில் வடிவத்தில் அது இங்கு ரூ.10 கோடி செலவில் கட்டப்படும். இது அயோத்யா ராமர் கோயிலின் வடிவில் அமையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தலைவர் அக்னிமித்ரா பாலின் கருத்தை பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான சங்கர் கோஷும் ஆதரித்து பேசுகையில், ‘எங்கள் கலாச்சாரமான ராமர் கோயிலைக் கட்டுவது என்பது இயற்கைக்கு உட்பட்டது. மசூதி என்பது எங்கள் மீது படை எடுத்தவர்களுக்கானது. இந்த மதத்தினரின் மனநிலையை தற்போதைய வங்கதேசம் எடுத்துரைக்கிறது. ராமர் கோயிலுடன் மசூதியை ஒப்பிடட முடியாது. தனி வரலாறு கொண்ட மசூதியை இந்த மாநிலத்தில் எப்படி கட்ட முடியும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக டிஎம்சி எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் மசூதி குறித்த அறிவிப்பை வெளியிடும்போது, ‘1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 வருடங்களாகியும் இன்னும் கட்டப்படவில்லை. இதை 35 சதவிகித முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டி முர்ஷிதாபாத்தில் கட்டுவோம். இதற்காக நிலம் அல்லது மானியம் கேட்டு மத்திய, மாநில அரசுகளை அனுக மாட்டோம்.’ எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியதாகப் புகார் எழுந்தது. சுதந்திரத்திற்கு முன்பாகத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த நவம்பர் 9, 2019 இல் முடிவிற்கு வந்தது. இதனிடையே, அயோத்தி பிரச்சினையை கையில் எடுத்த பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் லாபம் பெற்றனர். இந்த அரசியல், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜனவரியில் ராமர் கோயிலும் கட்டி முடிக்கப்பட்டது. அதேசமயம், அயோத்திக்கு அருகிலுள்ள பாபர் மசூதி கட்டுவதற்காக உபி அரசால் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதன் பணிகள் இன்னும் துவங்காத நிலையில், அயோத்தி மீதான அரசியல் முடிவிற்கு வரத் துவங்கியது. தற்போது டிஎம்சி எம்எல்ஏ கபீரின் அறிவிப்பால், பாபர் மசூதி - ராமர் கோயில் அரசியல் மேற்குவங்கத்தில் கிளம்பிவிட்டதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x