Published : 15 Dec 2024 05:00 AM
Last Updated : 15 Dec 2024 05:00 AM
புதுடெல்லி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா மக்களவையில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கடந்த 1952-ம் ஆண்டு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளிலும் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கடந்த 1968-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டன. கடந்த 1970-ம் ஆண்டில் மக்களவை கலைக்கப்பட்டது. இதன்பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. இதை அடிப்படையாக வைத்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா வரையறுக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் நாளை அறிமுகம் செய்கிறார். மக்களவை, சட்டப்பேரவை தொடர்பாக ஒரு மசோதாவும், யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக ஒரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகளின்படி மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இதற்காக தேசிய அளவில் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவது கடினம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களவை, சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் என்ன செய்வது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
இதற்கு தீர்வு காணும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவில் இடைத்தேர்தல் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது மக்களவை அல்லது சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் மட்டுமே நடத்தப்படும், பொதுத்தேர்தல் நடத்தப்படாது.
உதாரணமாக, ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை 2 ஆண்டுகளுக்கு பிறகு கலைக்கப்பட்டால் அந்த மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அங்கு பதவியேற்கும் புதிய அரசு 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிக்கும். ஐந்து ஆண்டுகள் நிறைவுக்குப் பிறகு இதர மாநிலங்களோடு சேர்த்து அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். மக்களவைக்கும் இதை நடைமுறை பின்பற்றப்படும். இதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT