Published : 14 Dec 2024 07:09 PM
Last Updated : 14 Dec 2024 07:09 PM
புதுடெல்லி: இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது என்று தெரிவித்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி, "யாரும் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை" என்று குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய ஒவைசி, “அரசியலமைப்பு நிர்ணய சபையின்போது, சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களால்தான் சிறையில் இருப்பது போன்று உணர்ந்தேன் என்று மவுலான ஆசாத் கூறியுள்ளார். இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது
அரசியலமைப்பு பிரிவு 26- ஐ வாசித்துப் பாருங்கள். மத மற்றும் தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக, நிறுவனங்களை உருவாக்கவும் பராமாரிக்கும் மதங்களுக்கு அரசியலமைப்பு உரிமை வழங்குகிறது. பிரதமரோ வக்புக்கும் அரசியமைப்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். பிரதமருக்கு யார் சொல்லிக் கொடுக்கிறார்கள்? அவரைச் சட்டப் பிரிவு 26-ஐ வாசிக்கச் சொல்லுங்கள். வக்பு சொத்துகளைப் பறிப்பதே இங்கு ஒரே நோக்கம். உங்களுக்கு இருக்கும் பலத்தின் மூலம் வக்ஃபு சொத்தை பறிக்க நினைக்கிறீர்கள்.
அதேபோல், பிரிவு 29-ஐ வாசித்துப் பாருங்கள். அது மொழிச் சுதந்திரத்தை வழங்குகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தைத் தந்த உருது மொழி இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. கலாச்சாத்தைப் பற்றி அவர்களிடம் (பாஜகவினர்) கேட்டால், அது எங்களின் கலாச்சார தேசியவாதம் என்று சொல்வார்கள். யதார்த்தத்தில் அது பாஜகவின் தேசியவாத கலாச்சாரம் இல்லை. அது இந்தியாவுடன் எந்தவித தொடர்பும் இல்லாத இந்துத்துவா தேசியவாதம்.
500 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி இங்கு இருந்ததா என்று என்னிடம் கேட்கப்படுகிறது. நாடாளுமன்றத்தைத் தோண்டிப் பார்த்து அதில் எனக்கு தொடர்புடைய ஒரு பொருள் கிடைத்தால், நாடாளுமன்றம் என்னுடையதாகிவிடுமா?” என்று ஒவைசி பேசினார்.
இறுதியாக அரசியல்வாதிகள் சமமற்ற முறையில் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய ஒவைசி, “குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இரண்டு முதல்வர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி சிறையில் இறந்தார்" என்றார். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறிய எதிர்க்கட்சிகளை பாஜக சாடிய சில மணிநேரங்களுக்கு பின்பு அசதுத்தீன் ஒவைசி இவ்வாறு பேசினார்.
அரசியலமைப்பின் மீதான விவாத்தின போது குறுக்கிட்டு பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்தியா சிறுபான்மையினருக்கு சட்டப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டும் இல்லாமல், தங்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்களுக்காக அடுத்தடுத்து வந்த அரசுகள் பணிகளைச் செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் அதனைச் செய்துள்ளது, அதன் பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT