Published : 14 Dec 2024 06:30 PM
Last Updated : 14 Dec 2024 06:30 PM

“இரு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவுக்கு வித்திடும்” - ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

புதுடெல்லி: இரண்டு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவையே ஏற்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ல் ரத்து செய்யப்பட்டபோது அந்த மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 28 இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, உமர் அப்துல்லா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து ஆட்சி நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்து உமர் அப்துல்லா விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “எங்கும் இரண்டு அதிகார மையங்கள் இருப்பது பேரழிவுக்கு வித்திட்டுவிடும். பல அதிகார மையங்கள் இருந்தால் எந்த அமைப்பும் நன்றாக வேலை செய்யாது. நமது விளையாட்டு அணிக்கு ஒரு கேப்டன் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஓர் அணிக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பதில்லை.

அதேபோல், இந்திய அரசாங்கத்தில் இரண்டு பிரதமர்களோ அல்லது இரண்டு அதிகார மையங்களோ இல்லை. மாநிலங்களிலும்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் முதல்வராக இருக்கிறார். இரட்டை அதிகார மைய அமைப்பு ஒருபோதும் வேலை செய்யப் போவதில்லை. டெல்லியின் முதல்வர், துணை நிலை ஆளுநருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், டெல்லி ஒரு மாநகர மாநிலம். ஆனால், ஜம்மு மற்றும் காஷ்மீர், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு பெரிய மற்றும் முக்கிய நிலப்பரப்பு. ஒருங்கிணைந்த உத்தரவுக்கான தேவையை இது அதிகமாக்குகிறது.

நான் முதல்வராக இருந்து வரும் இந்த இரண்டு மாதங்களில், யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஜம்மு காஷ்மீர் கண்ட பலன் ஒன்றுகூட இல்லை; வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு கூட இல்லை. ஜம்மு - காஷ்மீர் தேர்தல் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாகவே தேர்தல் நடந்தது. துரதிருஷ்டவசமாக, இது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மாநில அந்தஸ்து விஷயத்தில், உச்ச நீதிமன்றம் காலக்கெடு எதையும் விதிக்கவில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசமாக தொடருமானால், என்னிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. என் மனதில் ஒரு கால அளவு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படும் என்று நான் நம்ப விரும்புவதால், அதை இப்போதைக்கு வெளிப்படுத்த விரும்பவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் பலமுறை பிரச்சாரம் செய்தார்கள். மத்திய அரசின் மாநில அந்தஸ்து வாக்குறுதிதான் வாக்காளர்களை ஈர்த்தது. ஆனால், ​​​​பாஜக ஆட்சி அமைத்தால் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்றோ அல்லது ஜம்முவைச் சேர்ந்த ஒருவர் முதல்வரானால் மட்டுமே மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்றோ அவர்கள் கூறவில்லை. ஜம்மு காஷ்மீர் முழு மாநிலமாக திரும்பும் என்று சொன்னார்கள். எனவே, அது இப்போது செய்யப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான இறுதி முடிவை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இருவர் மட்டுமே எடுக்க முடியும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் உட்கார்ந்து முடிவு செய்ய வேண்டியது இதைதான். இதை எப்போது செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அல்லது அந்த முடிவுக்கு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கத்தில் எங்களால் செல்வாக்கு செலுத்த முடியும்.

காவல் துறை, பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றை லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​கையாளுகிறார். மற்ற நிர்வாகப் பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் உள்ளன" என்று உமர் அப்துல்லா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x