Published : 14 Dec 2024 02:34 AM
Last Updated : 14 Dec 2024 02:34 AM
அரசியல் சாசனத்தை காங்கிரஸார் தங்கள் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார். ஆனால் நாங்கள் இதயத்தில் சுமக்கிறோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
அரசியல் சாசன உருவாக்கத்தை ஒரு கட்சி எப்போதும் அபகரிக்க முயன்று வருகிறது. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட வரலாறு தொடர்பான இவை அனைத்தும் மக்களிடம் மறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் (ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர்) அரசியலமைப்பு சட்டத்தை தங்கள் பாக்கெட்டுகளில் வைத்துள்ளனர். ஆனால் பாஜக தலைவர்கள் அதை தங்கள் இதயங்களில் சுமக்கின்றனர்.
காங்கிரஸை போன்று அரசியல் ஆதாயம் அடைவதற்கான ஒரு கருவியாக அரசியல் சாசனத்தை நாங்கள் பயன்படுத்தியதில்லை. அரசியல் சாசனத்தை கடைப்பிடித்து வாழ்ந்தோம். அரசியல் சட்டத்திற்கு எதிராக தீட்டப்பட்ட சதிகளை விழிப்புடனும் உண்மையான போர் வீரனாகவும் இருந்து நாங்கள் எதிர்கொண்டோம். அதை பாதுகாப்பதற்காக மிகுந்த சிரமங்களை சந்தித்துள்ளோம்.
1976-ல் இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த அவசரநிலையின்போது அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கன்னா மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் அவர் தலைமை நீதிபதி பதவியை இழக்க நேரிட்டது. ஒரு சர்வாதிகார அரசின் அதிகாரங்களை அரசியல் சாசன வரம்புக்குள் மட்டுப்படுத்த முயன்றதற்காக நீதிபதிகள் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது.
1973-ல் அப்போதைய காங்கிரஸ் அரசு, அரசியல் சாசன விழுமியங்களை புறக்கணித்து நீதிபதிகள் ஜே.எம்.ஷெலட், கே.எஸ்.ஹெக்டே, ஏ.என்.குரோவர் ஆகியோரை ஒதுக்கிவிட்டு நான்காவது மூத்த நீதிபதியை இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமித்தது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT