Published : 13 Dec 2024 06:10 PM
Last Updated : 13 Dec 2024 06:10 PM

டெல்லியில் நாளை தலைமைச் செயலர்கள் மாநாடு தொடக்கம் - பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: தலைமைச் செயலர்களின் 4-வது தேசிய மாநாடு புதுடெல்லியில் நாளை கூடுகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைமைச் செயலர்களின் தேசிய நாடு நடத்தப்பட்டு வருகிறது. முதல் மாநாடு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தர்மசாலாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது மாநாடுகள் முறையே 2023 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் புதுடெல்லியில் நடைபெற்றன.

மாநிலங்களுடன் கூட்டாக ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான பொதுவான வளர்ச்சித் திட்டம் மற்றும் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதை இம்மாநாடு வலியுறுத்தும். தொழில்முனைவை ஊக்குவித்தல், திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துதல், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கு நீடித்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் மக்கள் தொகை பங்கீட்டைப் பயன்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு இது அடித்தளம் அமைக்கும்.

மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், நித்தி ஆயோக், மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் இடையேயான விரிவான விவாதங்களின் அடிப்படையில், நான்காவது தேசிய மாநாடு, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகளை உள்ளடக்கிய 'தொழில்முனைவோர், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் – மக்கள்தொகை பங்கீட்டை மேம்படுத்துதல்' என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும். இந்தக் கருப்பொருளின் கீழ், உற்பத்தி, சேவைகள், கிராமப்புறம், நகர்ப்புறம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வட்டப் பொருளாதாரம் ஆகிய ஆறு பகுதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்திற்கான தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி மையங்களாக நகரங்களை உருவாக்குதல், முதலீட்டுக்கான மாநிலங்களில் பொருளாதார சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு ஆகியவற்றை மிஷன் கர்மயோகி மூலம் உருவாக்குதல் ஆகியவை பற்றிய நான்கு சிறப்பு அமர்வுகள் நடத்தப்படும். இது தவிர, விவசாயத்தில் தற்சார்பு: சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகள், வயது முதிர்ந்தோர் பராமரிப்பு பொருளாதாரம், பிரதமரின் சூர்ய வீடு மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துதல், பாரதிய ஞான பரம்பரை ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் விவாதங்கள் நடைபெறும்.

மாநிலங்களுக்கிடையேயான பரஸ்பர கற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படும். தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x