Published : 13 Dec 2024 01:24 PM
Last Updated : 13 Dec 2024 01:24 PM

வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் கொள்கையை இந்தியா கடைப்பிடிப்பதைப் போல், இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுப்பதை அண்டை நாடுகள் கடைப்பிடிக்கின்றனவா என காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதோடு, பல்வேறு துணைக் கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “அண்டை நாடுகளுக்கு இந்தியா முன்னுரிமை கொடுப்பதைப் போல் அண்டை நாடுகள் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனவா என்ற கேள்விக்கு என்னுடைய பதில் ஆம் என்பதே. மாலத்தீவுகள் விஷயத்தைப் பொறுத்தவரை இரு தரப்பு உறவுகள் வலுவாக உள்ளன. இந்தியா பல தீவுகளை இணைக்கும் சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அண்டை நாடுகள் ஒன்றைஒன்று சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்திய - சீன எல்லையில் உள்ள 26 ரோந்துப் புள்ளிகளும் இந்திய வீரர்களால் அணுகக் கூடியதாக உள்ளதா என மணீஷ் திவாரி கேட்கிறார். இந்திய-சீன எல்லை தொடர்பாக நான் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். டெப்சாங் மற்றும் டெம்சோக் தொடர்பான ஒப்பந்தங்கள் கடைசியாக நடந்தவை. இந்தியப் படைகள் டெப்சாங்கில் உள்ள அனைத்து ரோந்துப் புள்ளிகளுக்கும், கிழக்கு எல்லைக்கும் செல்லும்.

பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்தவரை, அந்நாட்டுடன் நல்ல உறவை வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. ஆனால் மற்ற அண்டை நாடுகளைப் போலவே, நாமும் பயங்கரவாதம் இல்லாத உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம். கடந்த கால நடத்தையை மாற்றிக்கொண்டுவிட்டார்களா என்பதை பாகிஸ்தான் தரப்பு தான் காட்ட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை அந்நாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்ட நல்ல வரலாறு நமக்கு உள்ளது. இரு தரப்புக்கும் பயன்தரக்கூடிய, நிலையான உறவுக்குள் செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது.

இந்தியாவின் இந்த கவலை, வங்கதேச உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இந்திய வெளியுறவு செயலாளர் டாக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். வங்கதேசம் தனது சொந்த நலனுக்காக, அதன் சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x