Published : 13 Dec 2024 02:46 AM
Last Updated : 13 Dec 2024 02:46 AM
தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க மத்திய அரசிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நேரில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது:
இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கல்வெட்டுப் பிரிவின் மைசூர் கிளையில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தற்போது சென்னை கிளையில் உள்ளன. பல்லாண்டுகளாக டிஜிட்டல் முறையில் ஆவணமாக்கப்படாமல் உள்ளன. இவற்றை டிஜிட்டலாக்கி, ஆய்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் விரைவாகவும் இலவசமாகவும் வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னங்கள் அழிந்துபோகும் சூழலில் இருப்பதை தடுக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தின் மலைக்குகையில் பராந்தக சோழனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு உள்ளது. இது, ஏஎஸ்ஐயால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னம் என்றாலும் அதன் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது. இதுபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தவையாக அறியப்படும் கல்வட்டங்கள், கற்பதுக்கைகள் போன்றவை சோளிங்கர் நகரத்தை அடுத்த கரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ளளன. புகழ்பெற்ற மகேந்திரவாடி குடைவரைக் கோயிலுக்கு அருகில் உள்ள கோடம்பாக்கம் கிராமத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால பாறைக் கல்வெட்டு ஒன்றும், பதிவாகாமலும் பாதிக்கப்படும் சூழலில் உள்ளது.
மேலும் தனியார் நிலங்களில் உள்ள நினைவுக் கற்கள், கொற்றவை, தவ்வை, ஐயனார் உள்ளிட்ட பண்பாட்டு அடையாளங்கள், ஏரி தூம்பு, குமிழி, மதகு கல்வெட்டுகள் போன்றவை அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவையாக உள்ளன. இவை பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளன. இவற்றையும் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும்.
பாண்டியர் கால செப்பேடான 'வேள்விக்குடி' செப்பேடு லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டியர்கள் வரலாற்றை சொல்லும் ஆவணங்களே இவை. நெடுஞ்சடையன் பராந்தகன் (பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டு) என்னும் முற்காலப் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இந்த செப்பேடு வெளியானது. தமிழர் வரலாற்றை அறிய உதவும் இந்த செப்பேட்டை தமிழ் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் பல செப்பேடுகளும், சிலைகளும், பண்பாட்டு சின்னங்களும், ஈமத்தாழி உள்ளிட்ட தொல் பொருட்கள், புழங்கு மற்றும் கலைப் பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவை, வெளிநாடுகளில் விற்கப்பட்டும், வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. அவற்றை மீட்டு கொண்டுவர ஒரு குழுவை அமைக்க வேண்டும். சோழர்கள் காலத்தின் ஆனைமங்கல செப்பேடு இன்றைய நெதர்லாந்து நாட்டிலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இவற்றை மத்திய அரசு மீட்டுக் கொண்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் இன்றைய நிலை குறித்து அறியப்படுத்த வேண்டும். எனவே, நமது வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT