Published : 13 Dec 2024 02:14 AM
Last Updated : 13 Dec 2024 02:14 AM
புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின் 2020-ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி வியூகம் வகுத்துள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போவதில்லை. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது: டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அந்தத் திட்டத்துக்கு முதல்வர் ஆதிஷி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. அதேநேரத்தில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் 15 நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்சமயத்துக்கு இந்த உதவித்தொகையை வழங்க இயலாது.
ஆனால், இந்த உதவித் தொகை போதாது என்று பெண்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும். பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் முன்கூட்டியே அமல்படுத்தி இருப்போம். ஆனால், பாஜக சதி செய்து என்னை சிறைக்கு அனுப்பியது. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார். உடன் டெல்லி முதல்வர் ஆதிஷி இருந்தார்.
இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்போது, “கேஜ்ரிவால் அளித்த வாக்குறுதியின்படி பஞ்சாபில் எத்தனை பெண்களின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது. இப்போது டெல்லி தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ‘லாலிபாப்’ கொடுக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment