Published : 12 Dec 2024 03:22 PM
Last Updated : 12 Dec 2024 03:22 PM
புதுடெல்லி: மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, சம்பளம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் மீது வரியைச் சுமத்துவது முதலீடு மற்றும் பணியமர்த்தல் அதிகரிப்பு இல்லாமல், ஒரு பெரிய அளவிலான ஏகபோகத்தினை உருவாக்கியுள்ளது என்றும் சாடியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஊடகப் பிரிவு செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தனியார் துறையின் லாபம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், சம்பளங்கள் அனைத்து துறைகளிலும் 0.8 சதவீதம் முதல் 5.4 சதவீத வளர்ச்சியில் தேக்கம் அடைந்துள்ளது.
வருமானத்தின் பங்கு லாபமாக மூலதனத்துக்குச் செல்வதற்கும், ஊதியமாக தொழிலாளர்களுக்குச் செல்வதற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று சிஇஏ புத்திசாலித்தனமான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அதிரடியாக குறைக்காமல் இருந்திருந்தால் இந்த சமநிலையை கொள்கைகள் மூலமாகவே அடைந்திருக்கலாம்.
இதன் மூலம் ஒன்று தெளிவாகியுள்ளது. அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, பிஎல்ஐ-கள் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக ஆதாயம் வழங்குவது மற்றும் சம்பளம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் மீது வரிச்சுமையை அதிகப்படுத்துவது முதலீடு மற்றும் பணியமர்த்தலில் வெளிப்படையான அதிகரிப்பு இல்லாமல் பெரிய அளவிலான ஏகபோகத்தையே உருவாக்கிறது.
அரசின் இத்தகைய கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. நமது தற்போதையத் தேவை, சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு வரி குறைப்பும், ஏழைகளுக்கு வருமானத்துக்கான ஆதரவு அளிப்பதுமே. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி, அதன் காரணமாக விலைவாசி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு இல்லாமை மற்றும் வருமான தேக்கம் ஆகியவை அதிகரித்துள்ளதாக விமர்சித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT