Published : 12 Dec 2024 02:29 PM
Last Updated : 12 Dec 2024 02:29 PM
புதுடெல்லி: "காங்கிரஸுக்கும் - அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது. நாட்டினை சீர்குலைப்பதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது" என மாநிலங்களவையில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நண்பகலுக்கு முந்தை அமர்வுக்கான அலுவல்களுக்கான ஆவணங்கள் வைக்கப்பட்ட பின்பு, அன்றைய அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய ஆறு நோட்டீஸ்களையும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நிராகரிப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
இதற்கு பல காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் அவைத்தலைவர் தன்கரை விமர்சித்ததை ஜெ.பி. நட்டா கண்டித்தார்.
பாஜக தலைவர் கூறுகையில், "அவைத் தலைவரின் தீர்ப்பினை கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ முடியாது. அவ்வாறு செய்வது அவையையும் தலைவரையும் அவமதிப்பதாகும். காங்கிரஸுக்கும் - அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும் தொடர்பு இருக்கிறது. நாட்டினை சீர்குலைப்பதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்படுகிறது. சோனியா காந்திக்கும் - சோரஸுக்கும் என்ன உறவு என்பதை அறிய நாடு விரும்புகிறது" என்றார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பதில் அளிக்க அவைத் தலைவர் அனுமதி அளித்தார். கார்கே கூறுகையில், "ஆளுங்கட்சி பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைத்திருப்ப விரும்புகிறது" என குற்றம் சாட்டினார். இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே அமளி ஏற்ப்பட்டதை அடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT