Last Updated : 12 Dec, 2024 02:08 PM

 

Published : 12 Dec 2024 02:08 PM
Last Updated : 12 Dec 2024 02:08 PM

இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தாவுக்கு பெருகும் ஆதரவு - பின்னால் இருக்கும் ‘அரசியல்’ எது?

‘வரும்... ஆனா வராது...’ என்ற நகைச்சுவை வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு கச்சிதமாக பொருந்தும், ஆனால் கொஞ்சம் மாறுபட்ட வடிவில். அதாவது, ஒன்றிணைந்த நாளில் இருந்தே ‘இருக்கு, ஆனா இல்லை...’ என்கிற ரீதியில் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் பயணித்துக் கொண்டிருக்கிறது இண்டியா கூட்டணி.

ஆரம்பம் முதலே நாளொரு சர்ச்சை, பொழுதொரு போட்டி என முரண்பாடுகளுடன் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த இண்டியா கூட்டணியில் இப்போது மீண்டும் ஒரு குழப்பச் சூழல். இந்த முறையும் குழப்பத்தை தொடங்கி வைத்திருப்பவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியே தான்!

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “நான்தான் இண்டியா கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், காங்கிரஸ் தலைவர்களால், இந்தக் கூட்டணியில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியவில்லை. நான் என்ன செய்வது? அதேநேரத்தில், அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் நான் சிறந்த உறவைப் பேணி வருகிறேன். ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், இண்டியா கூட்டணியின் சுமுக செயல்பாட்டை என்னால் உறுதி செய்ய முடியும். அதற்காக, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார். என்னால் மேற்கு வங்கத்தில் இருந்தபடியே இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்து இயக்க முடியும்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தா முன்வந்திருப்பது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரது ஆதரவையும் பெற்றிருக்கிறது. “இண்டியா கூட்டணிக்குத் தலைமையேற்க மம்தா பானர்ஜி தகுதியானவர்தான். நாட்டிலுள்ள திறமையான தலைவர்களில் அவரும் ஒருவர்” என்று முதல் பச்சைக் கொடி காட்டினார், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைக் கொஞ்சம் சீண்டி பார்க்கும் வகையில் ஒருபடி மேலே போய் பேசியிருக்கிறார் கூட்டணியின் மற்றொரு மூத்த தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ்.

“இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க மம்தா பானர்ஜியை அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்திய லாலு, “இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்றும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். மம்தாவுக்கு இவ்வாறாக மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது, இதுவரை இண்டியா கூட்டணி தலைமை மீது அவர்கள் கொண்ட அதிருப்தியையே காட்டுகின்றன. இதைப் புரிந்துகொள்ள நாம் ‘இண்டியா’ கூட்டணி உருவான விதத்தை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2022-ம் ஆண்டு ஆர்ஜேடி நிறுவனர் லாலுவும், பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாரும் சோனியா காந்தியைச் சந்தித்து, ‘பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்று கோரினர். அதன்படி, பாஜகவுக்கு எதிராக கரம்கோத்து 2024 மக்களவைத் தேர்தலைச் சந்திப்பது என்ற முழக்கத்துடன், 26 கட்சிகள் ஒன்றுகூடி உருவானதுதான் இண்டியா கூட்டணி.

ஆனால், கூட்டு சேர்ந்த நாள் முதலே சர்ச்சைகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் பஞ்சமில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது இண்டியா கூட்டணி. யார் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதில் தொடங்கி, கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது வரை தட்டுத் தடுமாறியே ஓடத் தொடங்கியது இண்டியா கூட்டணித் தேர். பலகட்ட பரிந்துரைகளுக்கு பின்பு, கூட்டணிக்கு ‘இண்டியா’ என்ற பெயரை முன்மொழிந்து, அதன் தலைமைக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவை வழிமொழிந்தார் மம்தா பானர்ஜி.

அப்போது வெகு அருகாமையில் இருந்தது மக்களவைத் தேர்தல். அதன்மூலம் மாநிலங்களில் தங்களின் பலத்தை நிரூபித்து, பின்பு மத்தியில் பேரம் நடத்தலாம் என்பன போன்ற எண்ணங்களும் திட்டங்களும் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளிடம் இருந்தன. அதனால், காங்கிரஸ் தலைமையேற்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோல், ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’, ‘அன்பு அரசியல்’ போன்றவை காங்கிரஸின் இமேஜைக் கூட்டி இருந்ததும், கூட்டணிக் கட்சிகளின் முடிவுக்கு வலு சேர்த்தன.

எனினும், மாநிலங்களில் பலம் வாய்ந்த இடங்களில், மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளாதது, இண்டியா கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனிடையே, இண்டியா கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்த நிதிஷ் குமாரோ, கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் கரை ஒதுங்கினார்.

மத்தியில் உறவு, மாநிலத்தில் பகை என்ற ரீதியில் டெல்லி, பஞ்சாபில் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸும் தனித்து அரசியல் களம் கண்டன. ஊர் கூடி இழுத்த தேர், நிலை சேருமா சேராதா என்ற குழப்பத்துடனேயே மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது இண்டியா கூட்டணி.

மக்களவைத் தேர்தல் முடிவுகளால் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், இண்டியா கூட்டணியால் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை. ஆனால், காங்கிரஸ் தனது முந்தைய தொடர் தோல்விகளில் இருந்து கொஞ்சம் முன்னேறி, கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, அணி திரண்ட நாளில் இருந்தே ராகுல் காந்தியின் தலைமை மீது மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்குள் நெருடல் இருந்து வந்தது. அது பற்றி அவர்களே அடிக்கடி சூசகமாக கருத்துகளைக் கூறி வந்ததையும் கவனிக்க முடிந்தது.

அதேபோல், ராகுல் காந்தியை முன்னிறுத்தி சந்தித்த வடமாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு பல அடி கிடைத்தது. ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சேதாரம் ஏற்பட்டது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைக் கூட இழந்தது பெரும் சோகம்.

இன்னொரு புறம், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அதானி, அரசியலமைப்பு விவகாரங்களைத் தூக்கிப் பிடிக்கும் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை இண்டியா கூட்டணித் தலைவர்கள் ரசிக்கவில்லை. அரசியலமைப்பு அச்சுறுத்தல் பிரச்சாரம் என்பது மக்களவைத் தேர்தலில் ஓரளவு கைகொடுத்து இருந்தாலும்கூட, அது இப்போது எடுபடாது என்பதும், அதானி விவகாரத்தில் அரசியல் ஆதாயத்தை ஈட்ட முடியாது என்பதும் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் தவிர்த்த மற்ற கட்சித் தலைவர்களின் எண்ணம்.

ஏனெனில், அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன பிஹார், உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல்கள். இங்கு களமாட விவசாயிகள் பிரச்சினையும், சம்பல் மசூதி பிரச்சினையும் கைகொடுக்கும் என்பது அவர்களின் கணக்கு. அதானி விவகாரம் என்பது ராகுலின் சொந்த பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் ஏழு முறை எம்.பி., நான்கு முறை மத்திய அமைச்சர், மூன்று முறை மேற்கு வங்க மாநில முதல்வர் என்ற வலுவான ப்ரொஃபைல் கொண்ட மம்தா பானர்ஜிக்கு இண்டியா கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கூடி வருகிறது. பாஜகவை நேரடியாக எதிர்ப்பதில் காங்கிரஸின் இயலாமை மீதான அதிருப்தியை இண்டியா கூட்டணியில் உள்ள இளம் தலைவர்களும் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

“மம்தா பானர்ஜி உள்பட இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் யார் தலைமை தாங்கினாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அந்த முடிவை ஒருமனதாக எடுக்க வேண்டும்” என்கிறார் லாலுவின் மகனும், ஆர்ஜேடி-யின் தலைவருமான தேஜஸ்வி யாதவ்.

உத்தவ் தாக்கரே அணி சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி, “மம்தா பானர்ஜியின் விருப்பம் முக்கியமானது. எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் பாஜகவால் பரப்பப்படும் பொய்ச் செய்திகளையும், தவறான தகவல்களையும் திறமையாக கையாண்டு மம்தா தடுத்துள்ளார். அவருக்கு இண்டியா கூட்டணிக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால், அதையும் திறமையாகக் கையாண்டு கூட்டணியை வலுப்படுத்துவார் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது” என்று பாராட்டுப் பத்திரமே எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், சரத் பவார் மகளுமான சுப்ரியா சுலே, “இண்டியா கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றினால், அது எங்களுக்கு மகிழ்ச்சியே. மம்தா பானர்ஜியும் இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தானே எதிர்பார்க்காத வகையில், இண்டியா கூட்டணியில் கிடைத்துள்ள ஆதரவைக் கண்டு நெகிழ்ந்துள்ள மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்று வழிநடத்த எனக்கு ஆதரவளித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களும், அவர்களது கட்சிகளும் நலமுடன் இருக்கட்டும். அதேபோன்று இந்தியாவும் நன்றாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மம்தாவின் இந்த நன்றி அறிவிப்பு, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ‘டெவலெப்மென்ட்’ அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறது காங்கிரஸும், அதன் தலைமையும்.

இண்டியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா பானர்ஜி ஏற்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதன் பின்னணியில் இருப்பது, அரசியல் எதிர்காலமா அல்லது சொந்தக் கட்சிகளின் ஆதாயமா என்பதை மாறிக் கோண்டே இருக்கும் அரசியல் சதுரங்கம் தீர்மானிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x