Published : 12 Dec 2024 03:25 AM
Last Updated : 12 Dec 2024 03:25 AM
செல்போன் செயலி மூலம் பெற்ற ரூ.2,000 கடனை திருப்பிச் செலுத்தாததால், மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து நண்பர்க்ள், உறவினர்களுக்கு ஏஜெண்ட் அனுப்பி வைத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
செல்போன் செயலிகள் மூலம் அவசரத்துக்கு கடன் வாங்குவோர், ஏஜெண்ட்கள் மூலம் அவமானப்படுத்தப்பட்டு, இறுதியில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது. காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடன் செயலிகளையும், அதன் அட்டூழியங்களையும் முற்றிலுமாக ஒடுக்க முடியவில்லை. இதற்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு மீனவரும் பலியாகி உள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் நரேந்திராவுக்கும் (25) அகிலாவுக்கும் கடந்த அக்டோபர் 28-ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீன் பிடிக்க கடலுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நரேந்திரா, ஒரு செல்போன் செயலி மூலம் ரூ.2,000 கடன் வாங்கி உள்ளார். இதை அவரால் முறையாக திருப்பி செலுத்த முடியவில்லை. பணத்தை திருப்பிச் செலுத்தும்படி கடன் செயலி ஏஜெண்ட் பல முறை நரேந்திராவை எச்சரித்துள்ளார்.
இறுதியில், நரேந்திராவின் செல்போனில் உள்ள அவரது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, ஆபாச படங்களாக சித்தரித்து அவற்றை நரேந்திராவின் உறவினர்கள், நண்பர்களின் செல்போனுக்கு அந்த ஏஜெண்ட் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் நரேந்திராவிடம் கேட்டுள்ளனர். நரேந்திராவின் மனைவியும் இதைப் பார்த்து அழுதுள்ளார். இறுதியில் பணத்தை திருப்பித் தர முடிவு செய்தனர். ஆனால், இதை செயலி நிர்வாகத்தினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நரேந்திரா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு வாரத்திலேயே ஆந்திரவில் இதுபோன்று 3 சம்பவங்கள் நடந்துள்ளன. நந்தியாலம், குண்டூர் ஆகிய ஊர்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அனிதாவிடம் புகார்கள் சென்றுள்ளன. விரைவில் கடன் செயலியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT