Last Updated : 12 Dec, 2024 03:08 AM

 

Published : 12 Dec 2024 03:08 AM
Last Updated : 12 Dec 2024 03:08 AM

தாய்வீடு வந்தும் பதிப்பிக்கப்படாத தமிழ் கல்வெட்டுகள் - சென்னையிலிருந்து மீண்டும் மைசூருவுக்கு மாற்ற முயற்சியா?

மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டுக்களின் மைப்படிகள் தாய்வீடான தமிழகம் வந்த பிறகும் பதிப்பிக்கப்படவில்லை. இதனால் இவற்றை மீண்டும் மைசூருவுக்கு மாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வு கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டுகள் தலைமைப் பிரிவு, மைசூரில் செயல்படுகிறது. இங்கு சேகரித்து வைக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் வீணாகி வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து மைப்படிகளையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நீதிபதி கிருபாகரன் கடந்த 2021-ல் தீர்ப்பளித்தார். மேலும் குறைந்தபட்சம் 100 கல்வெட்டியலாளர்களை நியமித்து தமிழ் கல்வெட்டுகளை பதிப்பிக்க ஏஎஸ்ஐக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, மைசூரில் இருந்த படிகள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் ஏஎஸ்ஐ அலுவலகத்திற்கு நவம்பர் 2022-ல் வந்து சேர்ந்தன. இந்நிலையில் கூடுதல் கல்வெட்டியலாளர்கள் நியமிக்கப்படாமல், கடந்த 2 ஆண்டுகளாக இந்த மைப்படிகள் சென்னையிலும் பாழாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த மைப்படிகளை மீண்டும் மைசூர் அலுவலகத்துக்கு மாற்ற முயற்சிப்பதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக, மைசூரின் கல்வெட்டு பிரிவிலிருந்து டெல்லியிலுள்ள ஏஎஸ்ஐ தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களை மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஏஎஸ்ஐயின் மைசூரு கல்வெட்டுப் பிரிவின் இயக்குநர் முனிரத்தினம் கடந்த நவம்பர் 8-ல் தமது இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பிய கடிதத்தில், "சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினால் உறுதியான காரணங்கள் ஏதுமின்றி இக்கல்வெட்டு படிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என மைசூர் அலுவலகம் எழுதியிருந்தது. தமிழ்நாட்டை போல், மொழிவாரியாக கல்வெட்டுகளை ஒவ்வொரு மாநிலமும் கேட்க தொடங்கினால் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் உடைந்துபோகும்.

மைசூரில் இருந்து மாற்றப்பட்ட கல்வெட்டுப் படிகள் சென்னை கோட்டையின் பழமையான ஆங்கிலேயர் கால கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே உயர்நிலை நிபுணர் குழு அமைத்து, அந்த கல்வெட்டுப் படிகள் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலையை ஆராய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் கல்வெட்டுப் படிகள் சேதமாகும் பிரச்சினை, முதன்முறையாக கடந்த 2006-ல் எழுந்தது. அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இப்பிரச்சினையில் கவனம் செலுத்தினார். இதன் பலனாக, 2010-ல் ஏஎஸ்ஐயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டலாகப் பதிவுசெய்ய முயற்சித்தது. ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் வேலை தொடங்கவில்லை என்பதால் ஒப்பந்தம் முறிந்தது.

மதுரை கிளையின் தீர்ப்புக்கு பிறகு ஏஎஸ்ஐ எடுத்த ஒரு முயற்சியும் முழுமை அடைவில்லை. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளின் 74,000 கல்வெட்டுப் படிகளை டிஜிட்டல் முறையில் மாற்றும் பணி ரூ.4.76 கோடி செலவில் குருகிராமின் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஜுலை 7, 2022-ல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மீது தெலங்கானா உயர் நீதிமன்ற வழக்கின் உத்தரவால், அந்த ஒப்பந்தம் ரத்தானது.

இந்த சூழலில், தாய்வீடான தமிழ்நாட்டுக்கு வந்தும் தமிழ் கல்வெட்டுகளின் பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்வதாக தமிழ் வரலாற்றாளர்களும், மொழி ஆர்வலர்களும் வருந்தும் நிலை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x