Published : 12 Dec 2024 02:52 AM
Last Updated : 12 Dec 2024 02:52 AM
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுடன், நேரு-காந்தி குடும்பத்துக்கு ஆழமான உறவு உள்ளதாக பாஜக கூறியுள்ளது.
ஓசிசிஆர்பி என்ற புலனாய்வு பத்திரிக்கையாளர் அமைப்புக்கு அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளித்து வருகிறார். இந்த அமைப்பும், ராகுல் காந்தியும் இணைந்து இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானியின் புகழை கெடுக்கும் வகையிலான செய்திகளை பரப்புவதாக பாஜக குற்றம் சாட்டியது. மேலும் ஆசிய பசிபிக் ஜனநாய தலைவர்கள் கூட்டமைப்பு (எப்டிஎல் -ஏபி) என்ற அமைப்புக்கும் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளிக்கிறார். இந்த அமைப்பு காஷ்மீருக்கு சுதந்திரம் தேவை என்ற கருத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த அமைப்பின் துணைத் தலைவராக சோனியா காந்தி உள்ளார்.
இந்நிலையில் ஜார்ஜ் சோரஸ்-க்கும், நேரு குடும்பத்துக்கும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புள்ளதாக பாஜக கூறியுள்ளது. அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். அதேபோல் ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய உறவினர் பி.கே.நேருவின் மனைவி ஃபோரி நேருவும் ஹங்கேரியைச் சேர்ந்தவர். இந்த வகையில் ஃபோரி நேரு ராகுல் காந்திக்கு அத்தை. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பி.கே. நேரு பணியாற்றினார். அப்போதே ஃபோரி நேருவை சந்தித்து நட்பில் இருந்துள்ளார் ஜார்ஜ் சோரஸ். இந்த தொடர்புதான் இந்திய நலனுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் அதானி குறித்த அவதூறு செய்திகளுக்கும் காரணமாக இருக்கலாம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள காங்கிரஸ், ‘‘தொழிலதிபர் அதானியை காப்பாற்றுவதற்காக, அமெரிக்காவுடனான உறவையை பணையம் வைக்கும் அளவுக்கு மத்திய அரசு சென்றுள்ளதுதான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வெளிபடுத்தும் உண்மையான சதி’’ என கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT