Published : 04 Jul 2018 05:57 PM
Last Updated : 04 Jul 2018 05:57 PM

பட்டாசுத் தொழிற்சாலை தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பலி: தெலங்கானாவில் பரிதாபம்

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை, பட்டாசுத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 4 பெண்கள், 1 குழந்தை உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாரங்கல் மாவட்டம், கோட்டிலிங்காலு எனும் பகுதியில் பத்ரகாளி ஃபையர் ஒர்க்ஸ் எனும் பெயரில் கடந்த 11 ஆண்டுகளாக பட்டாசுத் தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது. இதனை ‘பாம்ப்’ குமார் என்பவர் நடத்தி வருகிறார். மேலும், இந்த தொழிற்சாலையின் முன், குமார் பட்டாசுக் கடையையும் வைத்துள்ளார். இங்கு சுப, அசுப நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் பட்டாசு வாங்கிச் செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் 20 தொழிலாளர்கள் இரவும், பகலும் பணியாற்றி வந்துள்ளனர்.

பயங்கர வெடி விபத்து

இந்நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில், இந்தத் தொழிற்சாலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்தச் சத்தம் சுமார் 2 கி.மீ. தூரம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தில் பலர் தூக்கி எறியப்பட்டனர். மேலும் சிலரது உடல் பாகங்கள் சிதறி வீசப்பட்டன. மேலும், சிலர் தரைமட்டமான அந்த தொழிற்சாலையின் அடியில் சிக்கி கதறி ஓலமிட்டனர். இதனைக் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீஸ், தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன் பேரில் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 2 மணி நேரம் போராடி, தீயை முற்றிலுமாக அணைத்தனர். கிரேன்களின் உதவியுடன் தரைமட்டமான தொழிற்சாலையின் இடுக்குகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் சிலரின் சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு மாமிசக் குவியல்களாக காணப்பட்டன. பின்னர், படுகாயமடைந்த 8 பேரை வாரங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

4 பெண்கள், 1 குழந்தை உட்பட 11 பேர் பலி:

இதனிடையே சிதறிக் கிடந்த உடல்களை போலீஸார் மீட்டனர். இந்தக் கோர விபத்தில் ஒரு குழந்தை, 4 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்துள்ளனர். இறந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக வாரங்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், வாரங்கல் மாவட்ட ஆட்சியர் ஹரிதா, போலீஸ் ஆணையர் விஸ்வநாதன் ரவீந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். மேலும் இது குறித்து நடத்திய விசாரணையில், பல ஆண்டுகளாக முறையான அனுமதி பெறாமலேயே இந்த பட்டாசுத் தொழிற்சாலையை குமார் நடத்தி வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குமாரை போலீஸார் கைது செய்தனர்.

ரூ. 5 லட்சம் நிதி உதவி அறிவித்த தெலங்கானா முதல்வர்

இந்தக் கோர சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திர சேகர ராவ், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி தருவதாக அவர் அறிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x