Published : 11 Dec 2024 12:05 PM
Last Updated : 11 Dec 2024 12:05 PM
புதுடெல்லி: அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தும் நோக்கில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளித்தனர்.
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக வாசலில் குழுமிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராகுல் காந்தி ரோஜா பூ மற்றும் தேசியக்கொடியை பரிசளித்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், “பாஜக நண்பர்களுக்கு ரோஜா பூ மற்றும் தேசியக் கொடியை பரிசளிப்பதற்காக நாங்கள் நாடாளுமன்ற வாயிலில் கூடி இருக்கிறோம். அனைத்தையும்விட நாடே முக்கியம் என்ற செய்தியை இதன்மூலம் வழங்கவே இதைச் செய்கிறோம்.” என தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, “தேசியக் கொடியை விநியோகித்தோம். நாட்டை விற்க வேண்டாம் என்றும், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக, தற்போது அதானிதான் நாட்டை நடத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம். அனைத்தும் அவருக்குத்தான் கொடுக்கப்படுகிறது. ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் சதிக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்.” என குறிப்பிட்டார்.
மற்றொரு காங்கிரஸ் எம்பி சுக்தியோ பகத் கூறுகையில், “பாஜக அரசு நாடாளுமன்றத்தை தவறாக நடத்துகிறது. அதானியின் பெயர் வந்தவுடனேயே அவை ஒத்திவைக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடத்தைக்கு உட்பட்டே நாங்கள் தேசியக் கொடியை விநியோகிக்கிறோம்.” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.பி.,க்களின் இந்த செயல் குறித்து பேட்டி அளித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் என்னை பேச விடுவதில்லை. நான்காவது நாளாக என்னுடைய ஜீரோ ஹவர் வீணடிக்கப்பட்டது. அவர்கள் எனது குரலை அடக்குகிறார்கள். இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படும் எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை.” எனக் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT