Published : 11 Dec 2024 02:41 AM
Last Updated : 11 Dec 2024 02:41 AM

55% ட்ரோன்களை அழிக்கும் திறன் வாய்ந்த உள்நாட்டு துப்பாக்கிகள்: அமித் ஷா பெருமிதம்

உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் 55 சதவீத ட்ரோன்களை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

பிஎஸ்எப் எனப்படும் எல்லையோரப் பாதுகாப்பு படையின் 60-வது நிறுவன நாள் விழா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்றது. மொத்தம், 2.65 லட்சம் வீரர்கள் உள்ள இந்த படைப் பிரிவு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான எல்லையில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நீங்கள் (பிஎஸ்எப் வீரர்கள்) எல்லையில் சிறப்பாக பணிபுரிவதால் நான் வீட்டில் பயமில்லாமல் தூங்க முடிகிறது. நம் நாடு, 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக விளங்குவதில், பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. எல்லைகள் பாதுகாப்பாக இருப்பது இந்த இலக்கை எட்டுவதை சாத்தியமாக்கும். அந்த வகையில், எல்லையை பாதுகாக்க பல நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வருகிறது. எல்லையோர கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இதில் ஒரு பகுதியாகும். இதைத் தொடர்ந்து துடிப்புள்ள எல்லை கிராமங்கள் என்ற திட்டத்தின் வாயிலாக, எல்லையோர மக்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அதுபோல, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான எல்லையில், ஒருங்கிணைந்த எல்லை நிர்வாக முறையை செயல்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் வாயிலாக எல்லையில் ஊடுருவலை தடுக்க முடியும்.

இதனிடையே, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்துவது, எல்லை பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது நமது ராணுவ வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் எல்லையைத் தாண்டி வரும் ட்ரோன்களை கண்டறிந்து அவற்றை அழிப்பதற்காக, உள்நாட்டில் தயாரான லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

இதன் வாயிலாக, முன்பு, 3 சதவீதமாக இருந்த ட்ரோன்களை கண்டறியும் திறன், தற்போது, 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எல்லை தாண்டி வரும் 55 சதவீத ட்ரோன்களை, இந்த துப்பாக்கிகள் அழித்து விடுகின்றன. மேலும், எல்லையை பாதுகாக்க, எல்லையோர பகுதிகளுக்கென, தனியாக ட்ரோன் எதிர்ப்பு முறையை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த வகை துப்பாக்கிகளுக்கு ட்ரோனம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

குருத்வா சிஸ்டம்ஸ் நிறுவனம் மூலம் இந்த ட்ரோனம் வகை துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வகை துப்பாக்கிகளில் இருந்து புறப்படும் லேசர் கதிர்கள், எதிரிநாட்டிலிருந்து ஏவப்படும் ட்ரோன்களை கண்டறிந்து அழிக்கும் திறமை வாய்ந்தவை என்று ட்ரோனம் திட்டத்தின் இன்ஸ்பெக்டர் பவன் குமார் தெரிவித்தார்.

2024-ல் இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த 260 ட்ரோன்கள், வழியிலேயே இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கடந்த 2023-ல் மொத்தம் 110 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x