Published : 11 Dec 2024 02:31 AM
Last Updated : 11 Dec 2024 02:31 AM
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்தபோது எந்த தவறும் கண்டறியப்படவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதே குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பையும் புறக்கணித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் விவிபாட் ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன. இதன்படி கடந்த நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது 1,440 விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. இதில் எந்த தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் விவிபாட் ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேமராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை. இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT