Published : 11 Dec 2024 01:54 AM
Last Updated : 11 Dec 2024 01:54 AM
வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், எவ்வளவு காலத்துக்கு இலவசங்களை வழங்குவீர்கள் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக போர்ட்டலை உருவாக்கி அதில் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் பதிவு செய்து ரேஷன் கார்டு வழங்கி உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய அரசு இ-ஷ்ரம் போர்ட்டலை தொடங்கியது.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது 2021-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பான அரசு சாரா அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகினர்.
பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘‘புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷனை பெறுவதற்கு ரேஷன் கார்டுகளை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்த அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்” என்றார். அதைத்தொடர்ந்து, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் நாட்டில் 81 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டு வியப்படைந்த நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: வரி செலுத்துபவர்கள் மட்டும் மத்திய அரசின் இலவச ரேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோன்ற இலவசங் களை வழங்க முடியும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உருவாக்குவது குறித்து ஏன் சிந்திக்க கூடாது. புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்க கூறினால் அது பல மாநிலங்களில் நிதி நெருக்கடியை உருவாக்கும். இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
சொலிசிட்டர் ஜெனரல்- பிரசாந்த் பூஷண் மோதல்: மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, ‘‘வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனுக்கள் மூலம் மறைமுகமாக ஆட்சி, நிர்வாகத்தை நடத்த முயற்சி செய்கிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பொதுநல மனுக்கள் மூலம் நாட்டை ஆள முயற்சி செய்யக்கூடாது. பிரசாந்த் பூஷண் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு பொது நல மனுக்களை தயாரிக்கிறார்’’ என்றார். இதற்கு பிரசாந்த் பூஷண், “தனிப்பட்ட பகைமை காரணமாக ஒவ்வொரு வழக்கிலும் என்னை குறித்து துஷார் மேத்தா எதிர்மறையாக பேசுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT