Published : 10 Dec 2024 02:13 PM
Last Updated : 10 Dec 2024 02:13 PM
புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரைப் போலவே பிறகூட்டணிக் கட்சிகளும் மம்தாவின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்பதற்கான தனது விருப்பதை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா வெளிப்படுத்திய நிலையில் லாலு பிரசாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அவர் (மம்தா) தலைமை ஏற்பதற்கு காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த லாலு பிரசாத் யாதவ், "காங்கிரஸின் எதிர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர் (மம்தா பானர்ஜி) இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க அனுமதிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக லாலுவின் மகனும், ஆர்ஜேடியின் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ், “மம்தா பானர்ஜி உட்பட இண்டியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் யார் கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் சிவ சேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, மம்தா பானர்ஜியின் விரும்பம் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டாலும் அதை இண்டியா கூட்டணி இணைந்து கூட்டாக முடிவெடுக்கும்.
இண்டியா கூட்டணிக்கு தலைமையேற்க விருப்பம் தெரிவித்து மம்தா வைத்திருக்கும் முன்மொழிவு மிகவும் முக்கியமான ஆலோசனையாகும். வரலாற்றில் அவரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.
எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், மேற்குவங்கத்தில் பாஜகவால் பரப்பப்படும் பொய் செய்திகள், தவறான செய்திகள், தகவல்களைப் பொறுப்புடன், திறமையாக கையாண்டு தடுத்துள்ளார். இண்டியா கூட்டணிக்கான தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டால் அதையும் திறமையாக கையாண்டு கூட்டணியை வலுப்படுத்துவார் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராகுல் காந்தியின் தலைமையை யாரும் கேள்வி கேட்கவில்லை என்று சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி., சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இண்டியா கூட்டணி குறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவர், லாலு பிரசாத், அகிலேஷ்ய உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அவை கேட்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது. இண்டியா கூட்டணி என்பது கூட்டாக உருவக்கப்பட்டது. அதனை வலுப்படுத்த யாரிடமாவது புதிய யோசனை இருந்தால் அது மதிக்கப்பட வேண்டும்.” என்றார்.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) எம்.பி சுப்ரியா சுலே, “இண்டியா கூட்டணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றினால் அது தங்களுக்கு மகிழ்ச்சியே. மம்தா பானர்ஜி இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமே!.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், இண்டியா கூட்டணியில் ராகுல் காந்தியின் தலைமை சுமையாக இருப்பதாகவும், அதற்குள் ஒற்றுமை இல்லை எனத் தெரிகிறது என்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் முன்பு சாடியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT