Published : 10 Dec 2024 08:57 AM
Last Updated : 10 Dec 2024 08:57 AM
மும்பை: மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சாரப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து பேருந்து ஓட்டுநர் சஞ்சய் மோர் (50) கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். ஆனால், பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்களோ ஓட்டுநர் போதையில் இருந்தார். அவரால் பேருந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலவில்லை. அதனாலேயே விபத்து நடந்தது என்று தெரிவித்துள்ளனர். பேருந்தை ஆய்வு செய்த ஆய்வாளர் பரத் ஜாதவும் பிரேக் சரியாக இருப்பதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிவதாகக் கூறியுள்ளார்.
அந்த மின்சாரப் பேருந்து இரவு 9.30 மணிக்கு குர்லாவில் புறப்பட்டு அந்தேரி மேற்கு அகர்கர் சவுக்குக்கு செல்லவிருந்தது. ஆனால் கோர விபத்தில் சிக்கியது. ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்தப் பேருந்து 4 பேர் மீது ஏறியதோடு 100 மீட்டர் வரை தவறான திசையில் தாறுமாறாக ஓடி இரண்டு ஆட்டோக்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது ஏறியது. இதில் ஒரு ஆட்டோ முற்றிலுமாக சேதமடைந்தது. போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT