Last Updated : 10 Dec, 2024 04:38 AM

34  

Published : 10 Dec 2024 04:38 AM
Last Updated : 10 Dec 2024 04:38 AM

“சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும்” - விஎச்பி நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி பேசியது என்ன?

இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டார். பொது சிவில் சட்ட அவசியம் குறித்து அவர் உரையாற்றினார்.

பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. முஸ்லிம்களுக்கும் அவர்களது மசூதிகளுக்கும் எதிராக சர்ச்சையான கருத்துகளை விஎச்பி பலமுறை வெளியிட்டுள்ளது. இதன் சட்டப்பிரிவு சார்பில் உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்ற நூலக அரங்கில் ஒரு பயிலரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பு சட்ட அவசியம், வஃக்பு வாரியச் சட்டம், மத மாற்றம்: அதன் காரணங்களும் தடுப்பு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளில் இப்பயிலரங்கம் நடைபெற்றன. விஎச்பி சட்டப்பிரிவின் தேசிய இணை அமைப்பாளரான அபிஷேக் அத்ரேயா இதனை தொடங்கி வைத்தார். இப்பயிலரங்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், 'பொது சிவில் சட்டம்: அரசியலமைப்பு சட்ட அவசியம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது நீதிபதி சேகர் யாதவ் பேசுகையில், "இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு மெஜாரிட்டியாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம். இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் மெஜாரிட்டியின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது" என்றார்.

கடந்த 2021-ல் பசுவதை குற்றவாளியின் ஜாமீன் வழக்கில், நீதிபதி சேகர் யாதவ், "இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். மற்றொரு உத்தரவில் நீதிபதி சேக்கர் யாதவ், ராமர், கிருஷ்ணர், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை இந்திய பாரம்பரியத்தின் அங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் கருத்து கூறியிருந்தார். சேகர் யாதவை போலவே மற்றொரு நீதிபதியான தினேஷ் பாதக்கும் இப்பயிலரங்கில் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x