Published : 09 Dec 2024 04:01 PM
Last Updated : 09 Dec 2024 04:01 PM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 2-வது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அடுத்தாண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கடந்த மாதம் 21-ம் தேதி வெளியிட்டது. இதில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரக் குழு இறுதி செய்தது.
இந்நிலையில் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. பத்பர்கன்ஜ் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும், மணீஷ் சிசோடியா வரும் தேர்தலில் ஜங்புரா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் சில நாட்களுக்கு முன் சேர்ந்த கல்வியாளர் அவாத் ஓஜா பத்பர்கன்ஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சியை அளித்து வந்தார். இவரிடம் பத்பர்கன்ஜ் தொகுதியை ஒப்படைத்தது மகிழ்ச்சி என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மீதமுள்ள 39 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆம் ஆத்மி இனிமேல் அறிவிக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT