Published : 09 Dec 2024 08:46 AM
Last Updated : 09 Dec 2024 08:46 AM

டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

புதுடெல்லி: தலைநகர் தலைநகர் டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர், நான் பள்ளி வளாகங்களின் உள்ளே பல இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். அவையெல்லாம் மிகச் சிறிய அளவிலானவை. அவற்றால் கட்டிடங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், வெடிகுண்டுகள் வெடித்தால் நிறைய பேர் காயமடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபர் தனக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

தொடரும் மிரட்டல்கள்: முன்னதாக கடந்த வாரம் டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா குளோபல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது. அதற்கும் முன்னதாக டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்த பகுதியிலிருந்து 1 கிமீ சுற்றுவட்டாரத்துக்குள் குறைந்த சக்தி கொண்ட மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதுபோல் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் போது அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லச் செய்யப்படுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கும் முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஆம் ஆத்மி அரசும் டெல்லி காவல்துறையும் இணைந்து வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள்வது தொடர்பாக விரிவான நிலையான செயல்பாட்டு வழிமுறையை வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரித்த மத்திய அரசு: நாடு முழுவதுமே பள்ளி, கல்லூரிகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அவ்வப்போது விடுக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. முன்னதாக, கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில், அதனைக் கையாண்ட முறைக்காக எக்ஸ், மெட்டா தளங்களை கடுமையாக சாடிய மத்திய அரசு, ‘சமூகவலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது’ என்றும் விமர்சித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x