Published : 09 Dec 2024 02:29 AM
Last Updated : 09 Dec 2024 02:29 AM

கேரள பாதிரியார் கார்டினலாக நியமிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: புனித போப் பிரான்சிஸ் அவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் நியமிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி. இது, இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம், பெருமையாகும். இயேசுவின் தீவிர சீடராக விளங்கும் அவர் மனித குல சேவைக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரது எதிர்கால செயல்பாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

51 வயதான பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட், கேரளாவின் சங்கனாச்சேரியை சேர்ந்தவர். இவரை கார்டினலாக போப் நியமித்ததைத் தொடர்ந்து அதற்கான விழா வாடிகன் நகரில் உள்ள பிரசித்திபெற்ற செயின்ட் பீட்டர் பசிலியா பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 21 புதிய கார்டினல்கள், போப் பிரான்சிஸ் முன்னிலையில் தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

கூவக்காட் நியமனத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த கார்டினல்களின் எண்ணிக்கை 6 -ஆக அதிகரித்துள்ளது. இது வாடிகனில் இந்தியாவின் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x