Published : 09 Dec 2024 01:39 AM
Last Updated : 09 Dec 2024 01:39 AM

வைப்பு நிதிக்கு அதிக வரியா: குஜராத்தில் வங்கி மேலாளரை தாக்கிய வாடிக்கையாளர்

புதுடெல்லி: நிரந்தர வைப்பு நிதிக்கு (பிக்ஸட் டெபாசிட்) அதிக வரி பிடித்தம் செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி மேலாளரை வாடிக்கையாளர் ஒருவர் புரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

43 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், வாடிக்கையாளர், வங்கி மேலாளர் ஒருவருக்கொருவர் தங்களது சட்டை காலரை பிடித்து அடித்துக் கொள்கின்றனர். மேலாளரின் தலைமுடியை பிடித்து இழுக்கின்றார் வாடிக்கையாளர். அப்போது, அருகில் இருந்த சக பெண் ஊழியர் மேலாளரின் பெயரைக் கூறி அவரை விட்டுவிடு்ங்கள் என சமாதானப்படுத்துகிறார்.

பின்னணியில் வாடிக்கையாளரின் தாயாரும், இருவரையும் விலக்கிவிட்டு சண்டையை சமாதானப்படுத்துகிறார். வாடிக்கையாளர் ஆத்திரம் தாங்காமல் திரும்பவும் வந்து மற்றொரு ஊழியரை தாக்க முயல்வது பதிவாகியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள வஸ்த்ரபூர் யூனியன் வங்கி கிளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வங்கியில் வைக்கப்பட்ட நிரந்தர வைப்பு தொகைக்கு வங்கியாளர்கள் அதிக வரிப்பிடித்தம் செய்ததால் விரக்தியடைந்த ஜெய்மன் ராவல் என்ற அந்த வாடிக்கையாளர் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

அண்மைக் காலமாக ,வாடிக்கையாளர்கள் வங்கியாளர்கள் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக காந்தி மைதான் பகுதியில் அமைந்துள்ள கனரா வங்கி கிளையில், பெண் மேலாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் சிபில் ஸ்கோர் சம்பந்தமாக நடைபெற்ற வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x