Published : 08 Dec 2024 03:09 PM
Last Updated : 08 Dec 2024 03:09 PM
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் என்ற மேற்குவங்க முதல்வர் மம்தாவின் விருப்பத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோலாப்பூரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவாரிடம் மம்தாவின் இண்டியா கூட்டணிக்கான தலைமை விருப்பம் பற்றி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த சரத் பவார், "நாட்டில் உள்ள திறமையான தலைவர்களில் அவரும் ஒருவர். அதனைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. நாடாளுமன்றத்துக்கு அவர் அனுப்பியிருக்கும் எம்பிக்கள் கடின உழைப்பாளிகள், விழிப்புணர்வு உடையவர்கள்" என்றார்.
முன்னதாக, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: “நான் இண்டியா கூட்டணியை உருவாக்கினேன். ஆனால், அவர்களால் (எதிர்க்கட்சித் தலைவர்கள்) அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் இண்டியா கூட்டணிக்குத் தலைமை தாங்கவில்லை.
கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைப் பொருட்படுத்துவதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணி வருகிறேன். வாய்ப்பு கிடைத்தால் இண்டியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். இண்டியா கூட்டணிக்குத் தலைமையேற்கத் தயார். நான் மேற்கு வங்கத்துக்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் மேற்கு வங்கத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும்” இவ்வாறு மம்தா தெரிவித்தார்.
பல்வேறு பிராந்திய கட்சிகளின் அதிருப்தி மற்றும் சமீபத்திய ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வியால் கூட்டணிக்குள் ஒரு அதிருப்தி பரவியிருக்கும் நிலையில், மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT