Published : 08 Dec 2024 12:16 AM
Last Updated : 08 Dec 2024 12:16 AM
புதுடெல்லி: எஸ் 400 ஏவுகணை மற்றும் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் விநியோகத்தில் ரஷ்யா தாமதிப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ரூ.40,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்தது. இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் 380 கி.மீ தொலைவில் இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்தவை. இந்தியாவுக்கு, ரஷ்யா இதுவரை 3 எஸ்-400 ஏவுகணை படைப்பிரிவுகளை மட்டும் விநியோகித்துள்ளது. இவற்றை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா விமானப்படை நிலைநிறுத்தியுள்ளது.
தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவில் உள்ள ராணுவத் தளவாட நிறுவனங்கள் எல்லாம் உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கு வழங்க வேண்டிய எஸ்-400 ஏவுகணைகளின் விநியோகத்தில் 2026-ம் ஆண்டு வரை தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் ரஷ்யாவிடமிருந்து எஸ்எஸ்என் ரக அணுசக்தி நீர்மூழ்கி நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டு காலம் குத்தகைக்கு எடுக்க இந்தியா கடந்த 2019-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் விநியோகமும் 2028-ம் ஆண்டுவரை தாமதம் ஆகும் என கூறப்படுகிறது. இவை தவிர சுகோய் போர் விமானங்கள், மற்றும் டி-90 டேங்க்குகளின் உதரிபாகங்கள் விநியோகத்தையும் ரஷ்யா தாமதித்து வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவிடம் இரு ஏவுகணை போர்கப்பலை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. இதில் ஒன்று தயார் நிலையில் உள்ளது. அதற்கு ஐஎன்எஸ் துஷில் என பெயரிடப்பட்டுள்ளது. இதை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் நடைபெறுகிறது. இதில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இந்த போர்க்கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும். மேலும், எதிரி நாட்டு ரேடாரில் இந்த கப்பல் எளிதில் சிக்காது. மற்றொரு கப்பலுக்கு ஐஎன்எஸ் தமல் என பெயிரிடப்பட்டுள்ளது. அது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு, இந்தியா- ரஷ்யா இடைய ராணுவ ஒத்துழைப்பு குறித்த கூட்டம் மாஸ்கோவில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலாஸ்சோவ் கலந்து கொள்கின்றனர். அப்போது இந்தியாவுக்கு ஒப்பந்தப்படி ராணுவத் தளவாடங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேள்வி எழுப்ப ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT