Published : 07 Dec 2024 06:28 PM
Last Updated : 07 Dec 2024 06:28 PM
மும்பை: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு தெரிவித்து உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளர் வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு அஸ்மி அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா பேரவையில் சமாஜ்வாதி கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 6-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பின் 32-வது ஆண்டு நினைவுநாளில் உத்தவ் தாக்கரே அணி சிவசேனாவின் பேரவையின் மேலவை உறுப்பினர் மிலிந்த் நர்வேகர், மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் அபு அஸ்மி கூறுகையில், "பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உத்தவ் அணி சிவசேனா நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. அவரது (உத்தவ் தாக்கரே) உதவியாளர் தனது எக்ஸ் பக்கத்தில், மசூதியை இடித்தவர்களைப் பாராட்டி பதிவொன்றைப் போட்டுள்ளார். நாங்கள் மகா விகாஸ் அகாடியில் இருந்து வெளியேறுகிறோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள ஒருவர் எப்படி அவ்வாறு பேச முடியும்? பின்னர் பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாங்கள் ஏன் கூட்டணியில் நீடிக்க வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 6-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், பாபர் மசூதி இடிக்கப்படும் படத்துடன் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின், "இதனைச் செய்தவர்கள் குறித்து நான்பெருமை கொள்கிறேன்" என்ற மேற்கோளையும் மிலிந்த் நர்வேகர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே மற்றும் நரவேகர் படங்களும் இடம்பெற்றிருந்தன.
இரு கட்சிகளுக்கு இடையேயான விரிசல் சனிக்கிழமை மாநில சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்தது. மகாராஷ்டிர பேரவையின் சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளில் இன்று மகா விகாஸ் அகாடி எம்எல்ஏக்கள் உறுப்பினர்களாக பதவியேற்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில், சமாஜ்வாதிக் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
மன்குர்த் சிவாஜி நகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்ந்து நான்காவது முறையாக அபு அஸ்மி பதவியேற்றார். அவரிடம் எம்விஏ எம்எல்ஏக்கள் பதவி ஏற்காதது குறித்து கேட்டபோது, “அதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம், தொகுதிப் பங்கீட்டின்போது எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. தேர்தலின்போது எந்த ஓர் ஒருங்கிணைப்பும் இல்லை" என்றார்.
ஹரியானா தேர்தல் தோல்விக்கு பின்பு சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான விரிசல் வெளிப்படையாக தெரிந்தது. ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மிகவும் திமிருடன் அங்கு போட்டியிட தங்களுக்கு சீட் வழங்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 2023 மத்தியப் பிரதேச தேர்தலிலும் சமாஜ்வாதிக் கட்சிக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT