Published : 07 Dec 2024 02:14 PM
Last Updated : 07 Dec 2024 02:14 PM

டெல்லியில் தொழிலதிபர் சுட்டுக் கொலை - நடந்தது என்ன?

புதுடெல்லி: டெல்லியின் ஷாதாராவில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 52 வயது தொழிலதிபர் ஒருவரை மர்ம நபர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாத்திர வியாபாரம் செய்து வந்த சுனில் ஜெயின் என்பவர், யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் இருந்து தனது நடைபயிற்சியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஃபர்ஷா பகுதியில் வைத்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சுனிலை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் மீது பல முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. உடனடியாக சுனில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்" என்று தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டபோது சுனில் ஜெயின் இரு சக்கர வாகனத்தில் இருந்திருக்கிறார். அவரைச் சுட்டவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரவிந்த கேஜ்ரிவால் எதிர்வினை: இதனிடையே, தலைநகரின் சட்டம் - ஒழுங்கு நிலையை முன்வைத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியை பாஜக அழித்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், "அமித் ஷா டெல்லியை சீரழித்துவிட்டார். அவர் டெல்லியை காட்டுமிராண்டி ராஜ்ஜியமாக மாற்றி வருகிறார். எல்லா இடங்களிலும் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இனிமேலும் பாஜகவால் டெல்லியின் சட்டம் - ஒழுங்கை கையாளமுடியாது. டெல்லி மக்கள் ஒன்றிணைந்து தங்களின் குரல்களை எழுப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியின் அமைச்சரான சவுரப் பரத்வாஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றில், "ஷாதாரா மாவட்டத்தில் அதிகாலையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. சுனில் ஜெயின் தனது நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கிச் சுட்டுள்ளனர். சுமார் 6, 7 ரவுண்ட் சுடப்பட்டுள்ளது. அனைத்து தோட்டாக்காளும் ஜெயினைத் தாக்கியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசமான டெல்லியில் போலீஸார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி வருவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x