Last Updated : 07 Dec, 2024 01:57 AM

1  

Published : 07 Dec 2024 01:57 AM
Last Updated : 07 Dec 2024 01:57 AM

பல்லடம் வழக்கில் போலீஸார் திணறல்: தமிழகத்தில் மீண்டும் பாவரியா கொள்ளை கும்பல் கைவரிசையா?

மற்றொரு கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட பாவாரியா கொள்ளையர்கள்

புதுடெல்லி: அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் பி.அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனத்தால் பல்லடம் படுகொலை சம்பவம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, அச்சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்னும் முறையான துப்பு கிடைக்காமல் தமிழக போலீஸாரின் 14 தனிப்படைகளும் திணறும் சூழல் உள்ளது. சுமார் 14 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் கொள்ளையுடன் நடந்த கொலைச் சம்பவங்களின் குற்றவாளிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த குற்றவாளிகளில் பாவரியா எனும் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த வட இந்தியர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒருமுறை நடைபெற்ற கொலைகளுடனான தொடர் கொள்ளைகளில் பாவரியா குற்றவாளிகள் முதன்முறையாக அடிபட்டனர். இவர்களை பிடிக்க அப்போதைய டிஐஜி ஜாங்கிட் நடத்திய தேடுதல் வேட்டை, ‘தீரன்’ எனும் பெயரில் படமாகி பிரபலமானது. ஜாங்கிட் மேற்கொண்ட கைதுகளுக்கு வட மாநிலங்களில் பணியாற்றும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளும் முக்கியப் பங்காற்றி இருந்தனர்.

இந்நிலையில், அதே பாவரியா சமூகத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் களம் காணத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், பல்லடம் கொலைகளில் கையாளப்பட்ட சில முறைகள் பாவரியா குற்றவாளிகளுக்கானது. குறிப்பாக அவர்கள் ஒருவரை கொலை செய்ய கையில் கிடைக்கும் மரம் உள்ளிட்டவற்றை ஆயுதமாக்கி நடுமண்டையில் முழுசக்தியுடன் அடிப்பது உண்டு. இதுவும் தங்கள் சாங்கியத்தின் அடிப்படையில் 6 முறை மட்டுமே அடிப்பார்கள் என்ற கருத்து உள்ளது. ராஜபுதனர்கள் உள்ளிட்ட அக்கால அரசர்களுக்கு போர்களிலும் உதவிய இவர்கள் இயற்கையிலேயே குரூரக் குணம் படைத்தவர்களாம்.

ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பாவரியாக்கள் அதிகம் வசிக்கின்றனர். குஜராத், டெல்லி, ம.பி., உத்தராகண்டிலும் இவர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் ஒரே பெயரில் அல்லாமல் பாப்ரி, பவுரியா, பவாரி, பாட்டி, நாரிபட் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். ஆனால் தாங்கள் எளிதில் சிக்கிவிடும் அபாயத்தை தவிர்க்க இவர்கள் வட மாநிலங்களில் அதிகமாக கொள்ளையடிப்பதில்லை. இந்த பாவரியாக்கள் அனைவருமே குற்றவாளிகள் அல்ல. இவர்களில் மனம் திருந்தி விவசாயம் செய்து பிழைப்பவர்களும் உள்ளனர்.

பல்லடம் சம்பவத்தில் பாவரியா குற்றவாளிகளுக்கான தொடர்பை தமிழ்நாடு காவல்துறை ஆய்வு செய்து முதலில் உறுதிசெய்ய வேண்டும். இதன் பிறகு பாவரியாக்கள் வாழும் பகுதியிலுள்ள காவல் அதிகாரிகளான தமிழர்களை தொடர்புகொண்டால், கூடுதல் தகவல்களுடன் கைதுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வட மாநிலங்களில் காவல்துறை அதிகாரிகளாக பணியாற்றும் தமிழர்கள் கூறும்போது, "ஜாங்கிட் பணிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் விசாரணையில் சம்மந்தப்பட்டவர்களும், பணி ஆர்வத்தில் சில அதிகாரிகளும் எங்களிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இவர்களுக்கு பல்லடம் கொலைச் சம்பவம் பாவரியா குற்றவாளிகளால் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

இதனால் நாங்கள் பாவரியாக்களின் பழைய செல்போன் எண்களை எடுத்து விசாரித்ததில் அவை அனைத்தும் தற்போது இணைப்பில் இல்லை. எனினும், தமிழக காவல்துறை இந்த வழக்கில் எங்களிடம் உதவிக் கேட்டால் அதை செய்யத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

48 ஆதாயக் கொலைகள்: தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் 2023 வரை சுமார் 48 ஆதாயக் கொலைகள் நடந்த பட்டியல் ஒன்று, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு கிடைத்துள்ளது. இது எதிர்க்கட்சிகளால் தமிழக சட்டப்பேரவையிலும் புகாராக எழுப்ப முயன்று முடியாமல் போனதாகக் கருதப்படுகிறது. இப்புகாரில் உண்மைக் குற்றவாளிகள் கைதாகாமல், பெயரளவில் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் ராஜபாளையம், காங்கேயம், அருப்புக்கோட்டை, சென்னிமலை, வி.களத்தூர், மகாபலிபுரம், காளையார் கோயில், தேவக்கோட்டை, ஆத்தூர் ஆகிய சம்பவங்களில் இருந்தன. இச்சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதுவன்றி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா 3 மற்றும் ராசிபுரத்தில் ஒரு சம்பவமும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சிசிடிவி குறை: கடந்த சில ஆண்டுகள் வரை விபத்து உள்ளிட்ட பலவகை குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரே ஆயுதமாக சிசிடிவி கேமராக்கள் இருந்தன. தற்போது மக்கள்தொகை பரவிய பகுதிகளிலும் அவை அதிகரிக்கப்படவில்லை எனக் கருதப்படுகிறது. அதேபோல், பழுதடைந்த சிசிடிவிக்களும் சரிசெய்யப்பட்டு, பராமரிக்கப்படவில்லை என்ற கருத்தும் உள்ளது.

இதே சிசிடிவி பல்லடம் சம்பவ பகுதியில் இல்லாததும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. மேலும், தற்போது தமிழகத்தில் பல லட்சம் எண்ணிக்கையில் வட மாநிலத்தவர்கள் பெருகி விட்டனர். இவர்களிடையே பாவரியாக்களை அடையாளம் கண்டு கைது செய்வதும் தமிழக போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்து விட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x