Published : 06 Dec 2024 07:18 PM
Last Updated : 06 Dec 2024 07:18 PM

“இது பாஜகவின் தந்திரம்...” - ‘அபிஷேக் சிங்வி இருக்கையில் பணக்கட்டு’ சர்ச்சையில் காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி: “மாநிலங்களவையில் அபிஷேக் சிங்வியின் இருக்கையில் பணக்கட்டு எடுக்கப்பட்டதாக கூறுவது மக்களின் கவனத்தை திசை திருப்பும், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகளின் விவாதத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் தந்திரம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம். நாங்கள் எழுப்பும் விவசாயிகள் பிரச்சினையை அவைத் தலைவரும் எழுப்பியுள்ளார். மோதானி (மோடி + அதானி) ஊழல் விவகாரத்தை நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இதுபோல் இன்னும் பல பிரச்சினைகள். இவற்றில் இருந்து எல்லாம் கவனத்தை திசை திருப்ப அவர்கள் புது பிரச்சினையை எழுப்புகிறார்கள்.

பாஜக உறுப்பினர்கள் அவையை ஒத்திவைக்க ஆர்வமாக இருந்ததை நான் இன்று பார்த்தேன். மக்களவையில் மோதானி ஊழல் விவகாரத்தை விவாதிக்க கோரினோம். மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, இந்த அரசின் யுக்தி. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. அவைகளை நடத்துவது அரசின் பொறுப்பு, நாங்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்குகிறோம். மாநிலங்களவையில் எதையும் விவாதிக்க அரசு தயாராக இல்லை.

இன்று அவையில் என் சக தோழர் அபிஷேக் சிங்வியின் பெயர் அடிபட்டது. அவரின் பெயரை கூறியது முற்றிலும் தவறானது. மாலை 6 மணிக்கு மேல்தான் அவை சோதனை செய்யப்பட்டது. பிறகு பணம் எப்படி வந்தது? விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்பட்டுவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவோ, விசாரணைக் குழுவோ அமைக்கட்டும், நாங்கள் விசாரணையில் இருந்து ஒடி ஒளியவில்லை. பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, அவையை செயல்படுத்தட்டும்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

நடந்தது என்ன? - காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, தெலங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மாநிலங்களவையில் அவரது இருக்கை எண் 222 ஆகும். கடந்த 5-ம் தேதி அவை காவலர்கள் வழக்கமான சோதனை நடத்தியபோது, அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை எண்ணியபோது மொத்தம் ரூ.50,000 இருந்தது.

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், அவையில் கூறும்போது, “கடந்த வியாழக்கிழமை அவைக் காவலர்கள் மாநிலங்களவையில் வழக்கமான சோதனை நடத்தினர். அப்போது அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையில் இருந்து ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 12.57 மணிக்கு அவைக்கு வந்தேன். சுமார் 3 நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்தேன். அதன்பிறகு மதிய உணவு சாப்பிட கேண்டீன் சென்றேன். மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். அதன்பிறகு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறி விட்டேன்.

மாநிலங்களவையில் 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன். நான் அவைக்கு வந்தபோது என்னிடம் ரூ.500 மட்டுமே இருந்தது. எனது இருக்கையில் கட்டுகட்டாக பணம் எடுக்கப்பட்டது என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இருக்கைக்கும் பூட்டு, சாவி போட்டால் நல்லது. ஒவ்வொரு எம்பியும் அவை முடிந்து செல்லும்போது இருக்கையை பூட்டி செல்லலாம். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தால் மாநிலங்களவையில் ஆளும் பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கார்கே Vs நட்டா: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “பணம் எடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவைத் தலைவர் கூறுகிறார். அந்த விசாரணை நிறைவு பெறாத நிலையில் அபிஷேக் மனு சிங்வியின் பெயரை அவைத் தலைவர் கூறியது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “எந்த இருக்கையில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. அந்த இருக்கை யாருடையது என்று மட்டுமே அவைத் தலைவர் கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும்போது, “அவையில் பணம் கண்டெடுக்கப்பட்டது மிகவும் முக்கிய பிரச்சினை. இது அவையின் கண்ணியம் சார்ந்தது. அவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x