Published : 06 Dec 2024 12:48 AM
Last Updated : 06 Dec 2024 12:48 AM
புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களும், ஆளுநர்களும் அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினை அழைக்க உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வர உள்ளார்.
உ.பி.யின் பிரயாக்ராஜில் அடுத்த வருடம் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செய்து வருகிறது. சுமார் 48 கோடி பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா 2025, ஜனவரி 13-ல் நடைபெற உள்ளது. விழாவுக்கு நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
உ.பி. அரசு சார்பில் இந்த அழைப்பு விடுக்கும் பொறுப்பு அதன் துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தென் மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களை அழைக்க துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வர உள்ளார். இவருக்கு உதவியாக அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வருகிறார். இவர்கள், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்க உள்ளனர். இதில் எதிர்க்கட்சி ஆளும் மூன்று மாநில முதல்வர்களை தவிர்க்கவும் வாய்ப்புள்ளது. எனினும் ஆளுநர்கள் தவறாமல் அழைக்கப்பட உள்ளனர்.
மற்றொரு துணை முதல்வரான பிரஜேஷ் பாதக் மகராஷ்டிரா செல்கிறார். இதுபோல் அமைச்சர்கள் ஸ்வந்திரதேப்சிங், ஏ.கே.சர்மா, ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஆகியோர் முறையே மத்தியபிரதேசம், குஜராத், அசாம் செல்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தாவை அழைக்க அமைச்சர் தயா சங்கர் சிங்கும் பிஹாரில் நிதிஷ் குமாரை அழைக்க அமைச்சர் ராகேஷ் சாச்சனும் செல்கின்றனர்.
பக்தர்களை வரவேற்கும் வகையில் ஜனவரி 10 முதல் பிரயாக்ராஜ் நதிக்கரையில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், பாலிவுட்டின் சங்கர் மஹாதேவன், சோனு நிகாம், ஸ்ரேயா கோஷல், விஷால் பரத்வாஜ், கைலாஷ் கேர், ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷ், மாலினி அவஸ்தி உள்ளிட்டோரின் ஆன்மிக கச்சேரிகளும் நடைபெற உள்ளன. இத்துடன் ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT