Published : 05 Dec 2024 01:24 PM
Last Updated : 05 Dec 2024 01:24 PM
புதுடெல்லி: மசூதியான கோயில்கள் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என மதுராவின் சர்வதேச இந்துக்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மதுராவில் உள்ள பிருந்தாவனில் சர்வதேச இந்துக்கள் மாநாடு நடந்து முடிந்துள்ளது. இங்குள்ள பாலாஜி மடத்தின் கோயிலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் உள்ள சில இந்து அமைப்புகளும் கலந்து கொண்டன. இதை இந்து ஜாக்ருதி சமிதி உள்ளிட்ட சில அமைப்புகள் முன்னிருந்து நடத்தின. இதன் முடிவில் சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநாட்டின் பொதுச்செயலாளரான சாரு தத்தா பிங்ளே தீர்மானங்களை வாசித்தார். அவை: “நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் மசூதியான கோயில் வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக வாரணாசியின் கியான்வாபி மசூதி மற்றும் மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி ஆகிய இரு வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து முடிக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இந்தியாவை இந்து நாடாக மாற்றுதுவது அவசியம்.
அமெரிக்காவின் ஆய்வு மையம், வரும் 2050-ல் உலகின் அதிகமான முஸ்லிம்கள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் எனக் கண்டறிந்துள்ளது. வஃக்பு வாரியங்கள் மூலமாக நில ஜிஹாத் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ’ என்பன.
மேலும், காசி-மதுரா வழக்குகளுக்காக நாடு முழுவதிலும் கையொப்பங்கள் பெறவும் இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் இந்துக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இந்திய அரசு தலையிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் மாமிசங்களுக்கான ஹலால் சான்றிதழ் முறையை தடை செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராவின் இந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான 54 இந்து அமைப்புகளின் 120 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் முக்கிய துறவிகள் மற்றும் மடங்களின் அதிபர்களும் கலந்து கொண்டனர். பிரபல வழக்கறிஞர்கள், சில பத்திரிகைகளின் ஆசிரியர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT