Published : 04 Jul 2018 08:23 AM
Last Updated : 04 Jul 2018 08:23 AM
வாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஓலா, உபேர் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. இந்த கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இருந்தபோதிலும், அவற்றை சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள் முறையாக பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக, கொலை, பலாத்காரம் போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்மையில் வாடகைக் காரில் பயணித்த ஒரு பெண்ணிடம் ஓட்டுநர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மேனகா காந்தி நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், வாடகை கார் நிறுவனங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், வாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT