Published : 05 Dec 2024 04:50 AM
Last Updated : 05 Dec 2024 04:50 AM

மும்பையில் இன்று பிரம்மாண்ட விழா: முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்

மும்பை: பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரல் கடிதத்தை நேற்று அவர் வழங்கினார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளிடையே முதல்வர், துணை முதல்வர் பதவிகள், அமைச்சரவை இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட் டது. கூட்டணியில் அதிக இடங்களில் (132 இடங்கள்) பாஜக வெற்றி பெற்றதால் முதல்வர் பதவியை ஏற்க பாஜக விரும்பியது. அதேநேரம், முதல்வர் பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதித்துறை மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்தது. இந்த சூழலில் நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக மேலிடப் பார்வையாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர். அதில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக பட்னாவிஸ் பதவியேற்க பாஜக மத்திய குழு ஒப்புதலை அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பட்னாவிஸுக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதத்தை அளித்தார். இதனையடுத்து, ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், “நான் முதல்வராக பதவியேற்பதை ஆதரித்து கடிதம் அளித்ததற்காக காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோருக்கு நன்றி.

முதல்வர் அல்லது துணை முதல்வர் என்பதெல்லாம் வெறும் ஏற்பாடுதான். நான், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகிய மூவரும் இதுவரை செயல்பட்டதைப்போல ஒன்றாக செயல்படுவோம். கூட்டாக முடிவுகளை எடுப்போம். நான் நேற்று ஷிண்டேவை சந்தித்து அரசின் ஓர் அங்கமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். சிவசேனா எம்எல்ஏக்களும் இந்த கூட்டுத் தலைமையை ஆதரிக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய ஏக்நாத் ஷிண்டே, “தேவேந்திர பட்னாவிஸுக்கு எனது முழு ஆதரவு உண்டு. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல்வராக பதவியேற்பதை ஆதரித்து தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். இன்று, நான் அவருக்கு அதையே செய்துள்ளேன். எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது” என கூறினார்.

அப்படியானால் துணை முதல்வராக நீங்கள் பதவியேற்க இருக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது விரைவில் தெரியவரும்” என்று ஷிண்டே பதிலளித்தார். அதேநேரம், அஜித் பவார், “நான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள போகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்க உள்ளார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். பதவியேற்பு விழா மும்பை ஆசாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக தேசிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். துணை முதல்வர்களாக பதவியேற்க ஏக்நாதஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x