Published : 05 Dec 2024 03:29 AM
Last Updated : 05 Dec 2024 03:29 AM
மும்பை: மகாராஷ்டிர தேர்தலில் மாலை 5 மணிக்குப் பிறகு 7.8% வாக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில் இது சராசரி வாக்குப் பதிவுதான் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளை கைப்பற்றியது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி 48 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகளின் முரண்பாடுகள் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது. இதில் வாக்குப் பதிவு கடைசி 1 மணி நேரத்தில் 76 லட்சம் வாக்குகள் பதிவானதை நம்ப முடியவில்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய தரவுகள் இது சராசரி வாக்குப் பதிவுதான் என காட்டுகிறது.
மகாராஷ்டிர தேர்தலில் முதல் 2 மணி நேரம் வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததால் 6.6% வாக்குகள் மட்டுமே பதிவானது. பிறகு காலை 9 முதல் 11 மணி வரை இது 11.5% ஆகவும் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை 14% ஆகவும் அதிகரித்தது. பிறகு மதியம் 1 மணி முதல் 3 மணி வரை இது 13.3% ஆக இருந்தது. மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை 7.8% வாக்குகள் பதிவானது மாலை 6 மணிக்குப் பிறகும் வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதால் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம் கூறுகையில், “மாலை 5 மணிக்கு பிறகு வாக்களிப்பு சதவீதம் அதிகரிப்பானது, பகலில் வாக்களிப்பு அதிகரிப்புடன் ஒத்துப்போகிறது. எந்த எழுச்சியும் இல்லை. இது ஒரு சாதாரண அதிகரிப்பு. 2019 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிட்டால் இதே போக்குதான் காணப்படுகிறது.
ஜார்க்கண்டில் மாலை 5 மணி வரையிலும் மகாராஷ்டிராவில் மாலை 6 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மக்கள் சீக்கிரம் எழுந்து, சீக்கிரம் வாக்களிக்க விரும்புகின்றனர்.
மகாராஷ்டிராவில் அதிக நகரமயமாக்கல் காரணமாக மக்கள் நாளின் பிற்பகுதியில் வாக்களிக்க முன்வருகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT