Published : 04 Dec 2024 03:01 PM
Last Updated : 04 Dec 2024 03:01 PM

“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” - ராகுல் ஆவேசம்

காசியாபாத்: "சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது" என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு மக்களவை எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் புதன்கிழமை சென்றனர். காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், உத்தரப் பிரதேசம் செல்லும் வழியில் காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் சம்பலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்தும் வகையில், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எம்பிகள் தடுத்தநிறுத்தப்பட்ட பின்பு வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி போலீஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நாங்கள் சம்பலுக்கு செல்வதற்கு முயன்றோம், போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நான் போலீஸாருடன் தனியாக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் அதனையும் ஏற்கவில்லை.

இன்னும் சில நாட்களுக்குப் பின்பு நாங்கள் வந்தால் அப்போது அவர்கள் எங்களை அங்கு செல்ல அனுமதிப்பதாக கூறுகிறார்கள். இது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கு எதிரானது, அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் அமைதியாக சம்பலுக்குச் சென்று அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவும், அங்குள்ள மக்களைச் சந்திக்கவும் விரும்புகிறோம்.

அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியிருக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. இதுதான் புதிய இந்தியா, அரசிலமைப்புச் சட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா, அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா. அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார். இந்தப் பேட்டியின்போது அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியை ராகுல் கையில் வைத்திருந்தார்.

தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து ராகுல் காந்தியுடன் சென்ற அவரது சகோதரியும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தி கூறுகையில், "சம்பலில் என்ன நடந்ததோ அது தவறு. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் அவருக்கு உரிமை வழங்கியுள்ளது. அவரை இவ்வாறு தடுத்து நிறுத்த முடியாது.

போலீஸாருடன் தனியாக செல்லத் தயார் என்று ராகுல் கூறிய பின்பும், அவர்கள் அதனைச் செய்யத் தயாராக இல்லை. போலீஸாரிடம் அதற்கு பதிலும் இல்லை. அந்த அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் நிலைமை சமாளிக்க முடியாத அளவில் உள்ளதா? நாங்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தோம் என்று அவர்கள் ஆணவமாக கூறுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, சம்பல் பகுதியில் பாரதிய நகாரிக் சுரக்‌ஷா சன்ஹிதா பிரிவு 163 (முன்பு 144 தடையுத்தரவு)-ன் படி கும்பலாக கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இந்த தடையுத்தரவு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்திருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சம்பல் வன்முறை, கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் உட்பட பலர் காயம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x