Published : 04 Dec 2024 09:20 AM
Last Updated : 04 Dec 2024 09:20 AM

“விவசாயிகளின் பொறுமையை சோதித்தால்...” - மத்திய அமைச்சரை மேடையிலேயே எச்சரித்த குடியரசு துணைத் தலைவர்

மும்பை: நாட்டில் எந்த சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மேடையிலேயே மத்திய விவசாயத் துறை அமைச்சரை எச்சரித்துள்ளார் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.

மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மும்பையில் நேற்று (டிச.03) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். அதே மேடையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் இருந்தார்.

அப்போது மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த குடியரசு துணைத் தலைவர், சிவராஜ் சிங் சவுகானை நோக்கி, “விவசாயத் துறை அமைச்சரே, உங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். விவசாயிகளுக்கு என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதை தயவு செய்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? அவர்களிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? வாக்குறுதியை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? சென்ற வருடம் ஒரு போராட்டம் நடந்தது. இந்த ஆண்டும் ஒரு போராட்டம் நடக்கிறது. காலச் சக்கரம் சுழல்கிறது, நாம் எதுவும் செய்யவில்லை.

விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நம்மால் எல்லைக் கோட்டை உருவாக்க முடியுமா? விவசாயிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது எனக்கு புரியவில்லை. இந்த முயற்சி ஏன் இதுவரை நடக்கவில்லை என்பதே என் கவலையாக இருக்கிறது. உலக அரங்கில் நமது நற்பெயர் முன்னெப்போதையும் விட உயர்ந்திருக்கிறது. இப்படியான சூழலில், ​​விவசாயிகள் ஏன் துயரத்தில் இருக்கின்றனர்? இது ஒரு தீவிரமான பிரச்சினை.

இதை இலகுவாக எடுத்துக் கொண்டால், நாம் நடைமுறையை புரிந்துகொள்ளவில்லை என்பதும், நமது கொளைகள் சரியான பாதையில் இல்லை என்பதும்தான் உண்மை. நாட்டில் எந்த சக்தியாலும் விவசாயிகளின் குரலை நசுக்க முடியாது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும்” இவ்வாறு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x