Published : 03 Dec 2024 06:22 PM
Last Updated : 03 Dec 2024 06:22 PM
புதுடெல்லி: சீனாவுடனான இந்தியாவின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, “இந்திய - சீன உறவில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்சினையை தீர்க்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் இயல்பு நிலை திரும்ப உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளிடையே, எல்லைப் பகுதிகளை நிர்வாகம் செய்வதில் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே இருந்த பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று கூறினார்.
இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை உள்ளது. எல்லைகள் இதுவரை துல்லியமாக வரையறை செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, எல்ஏசி எனப்படும் அசல் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு, இரு நாட்டு ராணுவத்தினரும் அவரவர் பகுதியில் ரோந்து சென்றுகின்றனர். இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் 2020-ல் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்தியாவும் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டது. இருநாட்டு ராணுவத்தினரும், நேருக்கு நேர் மோதும் வகையில் எல்லையில் படைகளை குவித்தனர். இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த 4 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் முடிவாக, கடந்த அக்டோர்பர் மாதம் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT