Published : 03 Dec 2024 01:22 PM
Last Updated : 03 Dec 2024 01:22 PM

தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்க: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு

சென்னை: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் குறித்த செய்திகள் வருத்தமளிக்கின்றன. இந்த துயரத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களுடைய உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிற்கும் மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் முன்வந்து நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவுவுமாறு வலியுறுத்துகிறேன்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று, நவம்பர் 29-ல் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இது புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதிப்பை சந்திக்கும் என்றும் ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. எனினும், இந்த மாவட்டங்களில் சில பகுதிகள் மட்டுமே மழை வெள்ளப் பாதிப்பில் சிக்கின. ஆனால் திசை மாறியதால், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - புதுச்சேரி இடையே புயல் கரையைக் கடந்தது.

பின்னர் வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதால் அங்கு வரலாறு காணாத மழைப் பொழிவு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் ஏழு பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x