Published : 03 Dec 2024 11:39 AM
Last Updated : 03 Dec 2024 11:39 AM
பெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்ததையடுத்து அங்கு 10 மாவட்டங்களில் இன்று (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக மாறிய ஃபெஞ்சல் புயலால் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று (டிச.02) கனமழை கொட்டித் தீர்த்தது. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறு மாலை தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் பெய்தது.
இதனையடுத்து அடுத்த 2 நாட்களுக்கு கர்நாடகாவில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், , தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொக்கா, சிக்மகளூரு, மைசூரு, சாமராஜ்நகர் மற்றும் ராமநகரா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாண்டியா, ஹாசன் மற்றும் பெங்களூருவுக்கு மஞ்சள் அலர்ட் தரப்பட்டுள்ளது.
இதனால் தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொக்கா, சிக்மகளூரு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அலர்ட் தரப்பட்டுள்ள பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் பெங்களூருவைச் சேர்ந்த பெற்றோர் பலரும் சமூக வலைதளங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று, நவம்பர் 29-ல் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இது புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பாதிப்பைச் சந்திக்கும் என்றும் ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது. எனினும், இந்த மாவட்டங்களில் சில பகுதிகள் மட்டுமே மழை வெள்ளப் பாதிப்பில் சிக்கின. ஆனால் திசை மாறியதால், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் - புதுச்சேரி இடையே புயல் கரையைக் கடந்தது.
பின்னர் வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றதால் அங்கு வரலாறு காணாத மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கர்நாடகாவில் நுழைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT