Published : 03 Dec 2024 01:42 AM
Last Updated : 03 Dec 2024 01:42 AM
புதுடெல்லி: பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது போராடும் விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் ஜகஜித் சிங் தலேவால், பஞ்சாப்-ஹரியானா எல்லையான கானவுரி பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து நவம்பர் 26-ம் தேதி அவரை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, தலேவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தலேவால் விடுவிக்கப்பட்டதையும், அவர் சனிக்கிழமையன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வற்புறுத்தியதையும் நாங்கள் பார்த்தோம். இதனால், ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் எழுப்பிய பிரச்சினை நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளது. அது நிலுவையில் உள்ள பிரச்சினை.
ஜனநாயக அமைப்பில் நீங்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம். கானவுரி எல்லைப் பகுதி பஞ்சாபின் உயிர்நாடி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். போராட்டம் சரியா, தவறா என்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் , சட்ட ஒழுங்கு சீர்குலையாத வகையில் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கும் தலேவால் போராட்டக்காரர்களை வற்புறுத்த முடியும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT